எதிர்வரும் பொதுத் தேர்தலில் இலங்கை தமிழரசுக் கட்சி சார்பில் யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடவுள்ள வேட்பாளர்களின் பெயர்ப்பட்டியல் வெள...
எதிர்வரும் பொதுத் தேர்தலில் இலங்கை தமிழரசுக் கட்சி சார்பில் யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடவுள்ள வேட்பாளர்களின் பெயர்ப்பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
பொதுத் தேர்தலில் போட்டியிடுவதற்கான இலங்கைத் தமிழரசுக் கட்சியின் வேட்பாளர்களை இறுதி செய்வதற்காக அந்த கட்சியின் நியமனக்குழு இன்றைய தினமும் கூடியது.
இதன்படி யாழ்ப்பாண மாவட்டத்தில் அந்த கட்சியின் சார்பில் 10 பேரின் பெயர்கள் இறுதி செய்யப்பட்டுள்ளதாக இலங்கை தமிழரசுக் கட்சியின் பேச்சாளர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
அதன்படி யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்திற்கான வேட்பாளர்களாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான சிவஞானம் சிறிதரன், எம்.ஏ.சுமந்திரன், எஸ்.சி.சி.இளங்கோவன், கேசவன் சயந்தன், சந்திரலிங்கம் சுகிர்தன், சுரேக்கா சசீந்திரன், இமானுவல் ஆர்னோல்ட், கிருஸ்ணவேணி சிறிதரன், மற்றும் தியாகராஜா பிரகாஷ் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அதேநேரம் மட்டக்களப்பு மாவட்டத்தில் 6 வேட்பாளர்களின் பெயர்கள் இறுதி செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அங்கு 4 வேட்பாளர்களின் பெயர்கள் இறுதி செய்யப்பட்டுள்ளன.
இந்தநிலையில், இலங்கை தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட கிளையுடன் கலந்துரையாடி ஏனைய இருவரின் பெயர்கள் இறுதி செய்யப்படும் எனவும் இலங்கை தமிழரசுக் கட்சியின் பேச்சாளர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் குறிப்பிட்டுள்ளார்.
இதன்படி, மட்டக்களப்பு மாவட்டத்தில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன், கிருஸ்ணப்பிள்ளை செயோன், தியாகராஜா சரவணபவன் மற்றும் வைத்தியர் சிறிநாத் ஆகியோரின் பெயர்கள் இதுவரையில் இறுதி செய்யப்பட்டுள்ளன.
இதேவேளை, வன்னித் தேர்தல் மாவட்டம், திருகோணமலை மற்றும் திகாமடுல்ல தேர்தல் மாவட்டங்களில் போட்டியிடும் வேட்பாளர்களின் பெயர்கள் இறுதி செய்யப்படவில்லை.
அத்துடன், திகாமடுல்ல தேர்தல் மாவட்டத்தில் இலங்கை தமிழரசு கட்சி தனித்துப் போட்டியிடும் எனவும் மீண்டும் நியமனக் குழு எதிர்வரும் புதன்கிழமை கூடி அங்கு போட்டியிடும் வேட்பாளர்களின் பெயர்களை இறுதி செய்யும் எனவும் இலங்கை தமிழரசுக் கட்சியின் பேச்சாளர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.