பாதாள உலக மன்னன் ஜெனமுல்ல சஞ்சீவ கொலையின் உண்மையான துப்பாக்கிதாரி கைது செய்யப்பட்டுள்ளார் என்பதை நிரூபிப்பதற்கான போதிய ஆதாரங்கள் தம்மிடம் ...
பாதாள உலக மன்னன் ஜெனமுல்ல சஞ்சீவ கொலையின் உண்மையான துப்பாக்கிதாரி கைது செய்யப்பட்டுள்ளார் என்பதை நிரூபிப்பதற்கான போதிய ஆதாரங்கள் தம்மிடம் இருப்பதாக சிறிலங்கா காவல்துறை தெரிவித்துள்ளது.
இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மனதுங்க, துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட நாளில் துப்பாக்கிதாரி பயன்படுத்திய கையடக்கத் தொலைபேசி அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
சந்தேகநபரின் வாக்குமூலத்தின் அடிப்படையில், துப்பாக்கிச் சூட்டின் போது சந்தேக நபர் பயன்படுத்திய ஆடைகள் வேறு இடத்தில் வீசப்பட்டிருந்ததை பொலிஸாரால் கண்டுபிடிக்க முடிந்ததாக அவர் மேலும் தெரிவித்தார்.
வாக்குமூலத்தின் அடிப்படையில், துப்பாக்கிச்சூடு நடத்துவதற்கு முந்தைய நாள் துப்பாக்கிதாரி தங்கியிருந்த லாட்ஜையும் போலீசார் பார்வையிட்டனர், அதிகாரிகள் ஆதாரங்களுக்காக சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர், என்றார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் துப்பாக்கிதாரி என்பதை நிரூபிப்பதற்கு போதிய ஆதாரங்கள் சேகரிக்கப்பட்டுள்ளதாக எஸ்.எஸ்.பி மனதுங்க உறுதியளித்தார்.
எவ்வாறாயினும், நீதிமன்ற வளாகத்தில் உள்ள சிசிடிவி காட்சிகளில் கைதான சந்தேகநபர் மற்றும் துப்பாக்கிதாரியின் அடையாளங்களை உறுதிப்படுத்துவதற்காக அரசாங்க பகுப்பாய்வாளர் திணைக்களத்தின் உதவியுடன் முக அடையாளம் காண நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.
சந்தேகநபரின் கைரேகைகள் மற்றும் டி.என்.ஏ என்பன இதற்காக பெற்றுக்கொள்ளப்படும் அதேவேளை நிபுணர்களின் உதவியும் கோரப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தச் சம்பவத்தில் துப்பாக்கிச் சூடு நடத்தியவரை நிரூபிப்பதற்கான ஆதாரங்களை சேகரிக்கும் பணியில் பொலிஸார் ஈடுபட்டு வருவதாகக் கூறிய அவர், எவ்வாறாயினும், அவர் மீது எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கையை நீதித்துறை தீர்மானிக்கும் என்றார்.
பாதாள உலக மன்னன் கணேமுல்ல சஞ்சீவ கொலைச் சம்பவத்தில் கைது செய்யப்பட்ட சந்தேக நபருக்கும் உண்மையான துப்பாக்கிதாரிக்கும் இடையில் ஏற்பட்ட குழப்ப நிலை குறித்து ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.