உள்ளூராட்சி மன்றத் தேர்தல் சட்டமூலத்தின் சில சரத்துக்கள் அரசியலமைப்புக்கு முரணானது எனவும் அதனை நாடாளுமன்றத்தின் விசேட பெரும்பான்மையுடன் நி...
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் சட்டமூலத்தின் சில சரத்துக்கள் அரசியலமைப்புக்கு முரணானது எனவும் அதனை நாடாளுமன்றத்தின் விசேட பெரும்பான்மையுடன் நிறைவேற்றிக் கொள்ள வேண்டும் எனவும் உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது.
இந்த சட்டமூலம் தொடர்பான உயர்நீதிமன்றத்தின் வியாக்கியானத்தை நாடாளுமன்றில் அறிவித்த சபாநாயகர் இதனைத் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தின் நிலையியற் கட்டளை 16 இன் விதிகளின்படி பிரதமர் ஹரிணி அமரசூரிய சபாநாயகரிடம் விடுத்த கோரிக்கையின் பிரகாரம் நாடாளுமன்றம் இன்று கூடிய போது இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
அரசியலமைப்பின் 121(1)ஆவது பிரிவின் கீழ் உயர் நீதிமன்றத்தில் சவால் செய்யப்பட்டு மூவரடங்கிய நீதியரசர்கள் கொண்ட ஆயம் முன்னிலையில் கிடைக்கப்பெற்ற சட்டமூலம் தமக்குக் கிடைக்கப்பெற்றுள்ளதாக சபாநாயகர் இன்று அறிவித்தார்.
நீதியரசர்கள் குழாத்தில் இருவர் பின்வருமாறு தீர்ப்பளித்ததாகக் குறிப்பிட்டார்.
இந்த சட்டமூலம் முழுவதுமாகவும், குறிப்பாக பிரிவுகள் 2 மற்றும் 3 அரசியலமைப்பின் பிரிவு 12(1) உடன் முரணாக இருப்பதால், அரசியலமைப்பின் பிரிவு 84(2) இன் ஏற்பாடுகளுக்கு இணங்க சிறப்பு பெரும்பான்மை வாக்குகளால் மட்டுமே அதை நிறைவேற்ற முடியும் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது என சபாநாயகர் குறிப்பிட்டார்.
நீதியரசர் குழாத்தில் எஞ்சியுள்ள நீதியரசர் பின்வருமாறு தீர்ப்பளித்ததாகக் குறிப்பிட்டார்.
சட்டமூலம் முழுமையாகவும் அல்லது அதன் எந்தவொரு ஏற்பாடும் அரசியலமைப்புடன் முரண்படுவது இல்லை என்பதால் அதனை நாடாளுமன்றத்தின் சாதாரண பெரும்பான்மை ஒன்றின் மூலம் நிறைவேற்ற முடியும் என்று குறிப்பிட்டதாக சபாநாயகர் தெரிவித்தார்.
உயர்நீதிமன்றத்தின் முழுமையான வியாக்கியானத்தை இன்றைய நாடாளுமன்ற கூட்ட நடவடிக்கைகள் பற்றிய அதிகார அறிக்கையில் பிரசுரிக்க கட்டளையிடுவதாகவும் சபாநாயகர் கூறியிருந்தார்.
இதேவேளை இந்த சட்டமூலத்தை ஆராய்வதற்காக சம்பந்தப்பட்ட அமைச்சு சார் ஆலோசனைக் குழுவை இன்றைய தினம் கூட்டுவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அந்த கூட்டத்திற்கு முன்பாக நீதிமன்றத்தின் வியாக்கியனம் தொடர்பிலான விளக்கத்தினை தமக்கு வழங்குமாறு எதிர்க் கட்சித் தலைவர் சபாநாயகரிடம் கோரிக்கை விடுத்தார்.
இதனிடையே நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரனும் உயர்நீதிமன்றத்தின் வியாக்கியானத்தை சபாநாயகர் சபையில் வாசித்த வேகத்திற்கு தமிழில் மொழி பெயர்ப்பு செய்யப்படவில்லை எனவும் ஆகவே இன்று நடைபெறவுள்ள அமைச்சு சார் கூட்டத்தில் தமிழிலும் மொழிபெயர்ப்பு செய்து வழங்க சபாநாயகர் உத்தரவிட வேண்டும் என கேட்டுக்கொண்டார்.