முல்லைத்தீவு மாவட்டத்தில் கரைதுறைப்பற்று, புதுக்குடியிருப்பு, ஒட்டுசுட்டான், மாந்தைகிழக்கு, துணுக்காய் ஆகிய ஐந்து பிரதேச செயலாளர் பிரிவுகளில...
முல்லைத்தீவு மாவட்டத்தில் கரைதுறைப்பற்று, புதுக்குடியிருப்பு, ஒட்டுசுட்டான், மாந்தைகிழக்கு, துணுக்காய் ஆகிய ஐந்து பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் சட்டவிரோத மது விற்பனையில் ஈடுபடுபவர்களாக 239 பேர் இனங்காணப்பட்டுள்ளதாகவும், வெலிஓயா பிரதேசசெயலாளர் இதுதொடர்பில் தரவுகளைத் திரட்டும்போது அச்சுறுத்தல்களுக்கு உள்ளானமையால், இதுதொடர்பில் அறிக்கை சமர்ப்பிக்கமுடியவில்லையெனவும் முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்தில் நேற்று (26) சுட்டிக்காட்டப்பட்டது.
இந்நிலையில், சட்டவிரோத மது மற்றும், போதைப்பொருட்களைத் தடுக்க மிகக் கடுமையான நடவடிக்கை தேவை என வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் வலியுறுத்தியுள்ளார்.
இதன்போது அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,
முல்லைத்தீவு மாவட்டத்தில் சட்டவிரோத மதுவிற்பனையில் ஈடுபடுபவர்களாக கரைதுறைப்பற்றுப் பிரதேசத்தில் 87 பேரும், புதுக்குடியிருப்பில், 28 பேரும், ஒட்டுசுட்டான் பிரதேசத்தில் 50 பேரும், துணுக்காய் பிரதேசத்தில் 34 பேரும், மாந்தைகிழக்கு பிரதேசத்தில் 40 பேருமாக முல்லைத்தீவுமாவட்டத்தில் மொத்தம் 239 நபர்கள் சட்டவிரோத மதுவிற்பனையில் ஈடுபடுவதாக இங்கே சுட்டிக்காட்டப்பட்டது.
அத்தோடு சட்டவிரோத மது விற்பனையாளர்கள் தொடர்பில் விபரங்களைத் திரட்டும்போது அச்சுறுத்தல் நிலைமைகள் ஏற்பட்டதாகத் தெரிவித்து வெலிஓயா பிரதேச செயலாளர்கள் இதுதொடர்பான அறிக்கை கையளிக்கமுடியாமல் போனதாகவும் இதிலே சுட்டிக்காட்டப்பட்டது.
இவ்வாறானதொரு நிலையிலே அதிகரித்துள்ள போதைப்பொருள் பாவனையால் அதிகளவானோர் முல்லைத்தீவு மாவட்டத்தில் உயிரிழக்கின்ற நிலைமைகள் காணப்படுகின்றன.
பலகிராமங்களுக்கு மக்கள் குறைகேள் சந்திப்பிற்காகச் சென்றபோது மக்கள் போதைப்பொருள் ஊடுருவல்கள் அதிகரித்துள்ளமை தொடர்பிலும், அதனால் ஏற்படுகின்ற மிக மோசமான பாதிப்பு நிலைமைகள் குறித்தும் முறையிட்டு கண்ணீர் வடிக்கின்றனர்.
குறிப்பாக புதுக்குடியிருப்பு பிரதேசசெயலகப் பிரிவிற்குட்பட்ட நான்கு கிராமங்களில் ஏறக்குறைய 48 பேரளவில் போதைப் பொருள் பாவனையால் உயிரிழந்துள்ளதாக மக்கள் முறையிட்டனர்.
அதேபோல் 2009ஆம் ஆண்டிற்கு முன்னர், விடுதலைப்புலிகளின் காலத்தில் இவ்வாறான போதைப்பொருள் ஊடுருவல்களும், போதைப்பொருள் பாவனைகளும் அதிகரித்திருக்கின்றன. இது தொடர்பில் உரிய தரப்பினர் ஏன் கவனம்செலுத்தவில்லை.
அதேவேளை, சில பொலிசாருக்கும் போதைப் பொருள் விற்பனையாளர்களுக்குமிடையில் நெருங்கிய தொடர்புகள் காணப்படுவதாகவும் மக்கள் எம்மிடம் முறையிடுகின்றனர்.
இந்நிலையில், போதைப்பொருள் விற்பனையாளர்களின் தரவுகள் ஒவ்வொரு பிரதேச செயலாளர்களிடமும் கோரப்பட்ட நிலையில், இதுதொடர்பில் தரவுகளைச் சேகரித்தால் தமக்கு அச்சுறுத்தல் ஏற்படுமென வெலிஓயா பிரதேசசெயலாளர் தெரிவித்திருக்கின்றார்.
அவ்வாறாயின் இங்கு யாருடைய அரசாங்கம் நடக்கின்றது. இவ்வாறாக சட்டம் ஒழுங்குகளை மீறுகின்ற வகையிலான செயற்பாடுகள் இடம்பெறுமாயின் இங்கு பொலிசார் எதற்கு.
இந்நிலைரில், அரசாங்கம் திட்டமிட்டு போதைபொருள் ஊடுருவல்களை எமது பகுதிகளிலமேற்கொள்வதாகவும் மக்களால் குற்றச்சாட்டுக்களும் முன்வைக்கப்படுகின்றன.
கசிப்பு,கஞ்சா, ஐஸ் என பல்வேறு போதைப்பொருள் ஊடுருவல்கள் அதிகரித்திருக்கின்றன.
இத்தகைய சூழலில் ஆளுநர், கூட்டுறவுப் பிரதியமைச்சர், ஏனைய பாராளுமன்ற உறுப்பினர்கள், மாவட்டச் செயலாளர், உரிய அதிகாரிகள் அனைவருமாக இந்த விடயம் தொடர்பில் மிகக் கடுமையான நடவடிக்கைகள் எடுத்து இத்தகைய போதைப்பொருள் ஊடுருவல்கள், பாவனைகளைத் தடுக்கவேண்டும்.
இல்லையேல் சிறிய காலத்திற்குப் பிற்பாடு இங்கு மக்க வசிக்கமாட்டார்கள், கசிப்பு உற்பத்தி செய்யப்படும் பானைகளும் தளபாடங்களுமே காணப்படும். இவ்வாறாக இந்த விடயத்தில் நிலைமைகள் மோசமடைந்துசெல்கின்றன.
இந்தநிலைமைகள் தொடர்ந்தால் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தையும் மக்கள் வெறுக்கவேண்டிய மக்கள் நிலை உருவாகும்.
எனவே இந்தவிடயத்தில் கூடிய கவனம் செலுத்தி சட்டவிரோத போதைப்பொருட்களை தடுப்பதற்கு தீவிர நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும். சட்டம் ஒழுங்கு பாதுகாக்கப்படவேண்டும் - என்றார்.