16 ஆவது இராணுவ நினைவுதின தேசிய நிகழ்வு இன்றைய தினம் இடம்பெறவுள்ளது. ஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டேயில் உள்ள இராணுவ நினைவுச் சின்னத்துக்கு முன்பாக...
16 ஆவது இராணுவ நினைவுதின தேசிய நிகழ்வு இன்றைய தினம் இடம்பெறவுள்ளது.
ஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டேயில் உள்ள இராணுவ நினைவுச் சின்னத்துக்கு முன்பாக பிற்பகல் 4 மணி முதல் 6 மணி வரை இந்த நிகழ்வு நடைபெறும் எனப் பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.
பாதுகாப்பு பிரதி அமைச்சர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர தலைமையில் நடைபெறும் இந்த இராணு நினைவு தின தேசிய நிகழ்வில் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா, அட்மிரல் ஒஃப் தி ஃப்ளீட் வசந்த கரன்னாகொட மற்றும் மார்ஷல் ஒஃப் தி ஏர்ஃபோர்ஸ் ரொஷான் குணதிலக்க ஆகியோரும் பங்கேற்கவுள்ளனர்.
இதனிடையே, 16 ஆவது இராணுவ நினைவுதின தேசிய நிகழ்வை முன்னிட்டு பத்தரமுல்லையை அண்மித்த பகுதிகளில் இன்றைய தினம் விசேட போக்குவரத்து திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளது.
பிற்பகல் 4 மணி முதல் 6.30 வரை இந்த விசேட போக்குவரத்து திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளது.
இந்த காலப்பகுதியில் வீதிகள் மூடப்படாது எனவும், நினைவுதின நிகழ்வுகள் முன்னெடுக்கப்படும் போது வாகன நெரிசல் ஏற்படுமாயின் பொல்துவ சந்தியிலிருந்து ஜெயந்திபுர, நாடாளுமன்ற வீதி வரை போக்குவரத்து மட்டுப்படுத்தப்படும் எனவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
விசேட போக்குவரத்து திட்டம் அமுலில் இருக்கும் காலப்பகுதியில் வாகன சாரதிகள் மாற்று வீதிகளைப் பயன்படுத்துமாறும் காவல்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.