இலங்கை போக்குவரத்துச் சபையினால் மாற்று வேலைத்திட்டம் எதுவுமின்றி 2025 ஆம் ஆண்டில் நிகழ்நிலை ஆசன முன்பதிவு வசதிகளைக்கொண்ட பேரூந்துச் சேவைகள் ...
இலங்கை போக்குவரத்துச் சபையினால் மாற்று வேலைத்திட்டம் எதுவுமின்றி 2025 ஆம் ஆண்டில் நிகழ்நிலை ஆசன முன்பதிவு வசதிகளைக்கொண்ட பேரூந்துச் சேவைகள் இரத்துச் செய்யப்பட்டமை தொடர்பிலும், அவ்வாறு இரத்துச் செய்யப்பட்ட பயணத் தடவைகளுக்காக பணம் அறவிடப்பட்டு மீளச்செலுத்துவதில் தாமதம் ஏற்படுகின்றமை தொடர்பிலும் வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் அவர்களால் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
இந்நிலையில் இதுவரை 11 இலட்சத்து 96 ஆயிரத்து 46 ரூபாய் இரத்துச் செய்யப்பட்ட பயணத் தடவைகளுக்காக அறவிடப்பட்டு இதுவரையில் மீளச் செலுத்தப்படாமலுள்ளதாக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் பிரதி அமைச்சர் பிரசன்ன குணசேன தெரிவித்தார்.
அத்தோடு தொடர்புடைய காசட்டைக்கு பணத்தை மீள வழங்குவதற்கு மக்கள் வங்கியுடன் தேவையான தொழினுட்ப ஏற்பாடுகளை இலங்கை போக்குவரத்துச்சபை தொடங்கியுள்ளதாகவும், நிகழ்நிலை வழியிலான ஆசன ஒதுக்கீட்டுக் கொள்கையை மீளாய்வு செய்து இரத்துச்செய்யப்பட்ட பயணங்களுக்கான பணத்தினை மீளச்செலுத்துவதில் உள்ள தாமதத்தை தீர்க்கும் வகையில் புதியதிட்டத்தை எதிர்வரும் செப்ரெம்பர்மாதம் முதலாம் திகதி அமுல்படுத்தவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் 19.08.2025 இன்று நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் வாய்மூல விடைக்கான வினா நேரத்தில் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சிடம் கேள்வி எழுப்பியநிலையிலேயே பிரதியமைச்சர் மேற்கண்டவாறு பதிலளித்துள்ளார்.
இதுதொடர்பில் மேலும் தெரியவருகையில்,
இலங்கை போக்குவரத்துச் சபையினால் மாற்று வேலைத்திட்டம் எதுவுமின்றி 2025 ஆம் ஆண்டில் நிகழ்நிலை ஆசன முன்பதிவு வசதிகளைக்கொண்ட பேரூந்துச் சேவைகள் இரத்துச் செய்யப்பட்டமைதொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரனால் கேள்வி எழுப்பப்பட்டது.
அவ்வாறு இரத்துச் செய்யப்பட்ட பயணத் தடவைகளுக்காக அறவிடப்பட்டு இதுவரையில் மீளச் செலுத்தப்படாத பணத்தொகை தொடர்பில் இதன்போது கேள்வி எழுப்பப்பட்டதுடன், பயணத் தடைகள் இரத்துச் செய்யப்படும் சந்தர்ப்பங்களில் அது தொடர்பில் பயணிகளுக்கு முன்கூட்டியே அறிவிப்பதற்கும், அதற்குரிய பணத்தை தாமதமின்றி மீளச் செலுத்துவதற்கும் ஏதேனும் வேலைத்திட்டம் அமுல்படுத்தப்படுகின்றதா என்பது தொடர்பிலும் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் கேள்வி எழுப்பினார்.
பயணிகளின் நன்மை கருதி வெளிப்படைத்தன்மையுடன் கூடியதாக இந்தடவடிக்கை இடம்பெறுகின்றது என்பதனை உறுதிப்படுத்தும் வகையில் நிகழ்நிலை வழியிலான ஆசன ஒதுக்கீட்டுக் கொள்கையை மீளாய்வு செய்வதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் இதன்போது நாடாளுமன்ற உறுப்பினரால் வலியுறுத்தப்பட்டது.
இந்நிலையில் இதன்போது போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் பிரதி அமைச்சர் பிரசன்ன குணசேன பதிலளிக்கையில்,
2025ஆம் ஆண்டில் 4,928 முன்பதிவுசெய்யப்பட்ட பயணங்கள் இதுவரை இரத்துச்செய்யப்பட்டுள்ளன. இவற்றுள் 2541 பயணங்களுக்கு மாற்று பேருந்துகள் வழங்கப்பட்டதோடு 1505 பயணங்களுக்கு பயனாளிகளுக்கு மாற்று திகதிகள், மாற்று பயண ஏற்பாடுகள் வழங்கப்பட்டுள்ளன. அதன் அடிப்படையில், 4928 முன்பதிவு செய்யப்பட்ட பயணங்களில் இதுவரை 4046 பயணங்களுக்கு மாற்று ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
அதேவேளை இதுவரை 11 இலட்சத்து 96 ஆயிரத்து 46 ரூபாய் இரத்துச் செய்யப்பட்ட பயணத் தடவைகளுக்காக அறவிடப்பட்டு இதுவரையில் மீளச் செலுத்தப்படாமல் காணப்படுகின்றது.
அத்தோடு பயணம் ஒன்று இரத்துச்செய்யப்படும் போது, மாற்று பேருந்து ஒன்றை வழங்குவதற்கே முன்னுரிமை அளிக்கப்படும். மற்றொரு பேருந்தை வழங்க இயலாத நிலையில், முன்பதிவு செய்த பயணிகள் அனைவர்க்கும் குறுஞ்செய்தி ஊடாக அறிவுறுத்தப்படுவதோடு மற்றொரு பேருந்தில் அதே நாளிலோ மற்றொரு நாளிலோ அவர்கள் பயணம் செய்வதற்கேற்ற வசதிகள் வழங்கப்படும். மேற்படி இரண்டு முறைகளையும் பயணிகள் தெரிய விரும்பாத நிலையில், அவர்கள் செலுத்திய பணம் மீள வழங்கப்படும். பணம் மீள செலுத்தப்படும் முறையில், சம்பந்தப்பட்ட பயணியின் கணக்கு விபரங்களை சரிபார்ப்பதற்கு பல நாள்கள் எடுக்கும். பின்னர் பயணியின் சொந்தக்கணக்கிற்கு காசு வரவு வைக்கப்படும்.
தற்போது, பேருந்தின் பயணத்திட்டம், புறப்படும் நேரம், பேருந்து நடத்துநரைத் தொடர்புகொள்ளக்கூடிய தொலைபேசி இலக்கம், ஏதேனும் ஒரு காரணத்துக்காக பேருந்து பயணம் செயற்படுத்தப்படாவிடின், திட்டமிட்ட பேருந்துக்கு பதிலாக வேறு பேருந்தை செயற்படுத்தப்படின் அவை தொடர்பாக பயணிகளுக்கு குறுஞ்செய்தி ஊடாகவும் 1315 எனும் குறுந்தொலைபேசி சேவை ஊடாகவும் அறிவிக்கப்படுகிறது.
இதற்கு மேலதிகமாக, இரத்துச்செய்யப்பட்ட பயணங்களுக்கான பணத்தினை மீளச்செலுத்துவதில் உள்ள தாமதத்தை தீர்க்கும் வகையில் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும் தொடர்புடைய காசட்டைக்கு பணத்தை மீள வழங்குவதற்கு மக்கள் வங்கியுடன் தேவையான தொழினுட்ப ஏற்பாடுகளை இலங்கை போக்குவரத்துச்சபை தொடங்கியுள்ளது. நிகழ்நிலையில் இருக்கைகளை முன்பதிவு செய்யும் போது, பயணச்சிட்டைக்கான பணம் நேரடியாக இலங்கை போக்குவரத்துச் சபையின் மக்கள் வங்கிக் கணக்கிற்கு வரவு வைக்கப்படுவதோடு மீள்செலுத்துதலும் அதே கணக்கின் ஊடாக மேற்கொள்ளப்படும். இப்படியான முறைமை செப்டெம்பர் மாதம் முதலாம் திகதியில் இருந்து நடைமுறைப்படுத்தப்பட திட்டமிடப்பட்டுள்ளதாகவும் பிரதியமைச்சரால் இதன்போது தெரிவிக்கப்பட்டது.
இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்,
நிகழ்நிலை வழியிலான ஆசன ஒதுக்கீட்டுக் கொள்கையை மீளாய்வு செய்து இரத்துச்செய்யப்பட்ட பயணங்களுக்கான பணத்தினை மீளச்செலுத்துவதில் உள்ள தாமதத்தை தீர்க்கும் வகையில் புதியதிட்டத்தை எதிர்வரும் செப்ரெம்பர் முதலாம் திகதி அமுல்படுத்துவதை வரவேற்கின்றேன்.
ஏற்கனவே இத்தகைய தவறுகளை இருப்பதால் அவற்றினைச் சீர்செய்யவேண்டும் என்பதற்காகவே தங்களிடம் கேள்விஎழுப்பவேண்டியிருந்தது.
அதேவேளை நிகழ்நிலைவழியிலான ஆசனப் பதிவு பேருந்துகள் சேவைகளை வழங்கமுடியாத நிலையிலிருப்பின், ஆசனப்பதிவுசெய்த பயணிகளுக்கு உடனடியாக தகவல் வழங்கப்படுவதில்லை. தாமதமாகியே பயணிகளுக்கு தகவல்கள் வழங்கப்படுகின்றன. இதனால் ஆசனப் பதிவை மேற்கொண்டுவிட்டு பேருந்தை எதிர்பார்த்திருக்கும் பயணிகள் தாமதித்த திடீர் அறிவிப்புக்களால் அவதியுறுகின்ற நிலையும் ஏற்படுகின்றது.
குறிப்பாக முல்லைத்தீவு மாவட்டத்தைப்பொறுத்தவரையில் புதுக்குடியிருப்பிலிருந்து இரவு 08.30மணிக்குப் புறப்படும் கொழும்பிற்கான பேருந்து முல்லைத்தீவிற்கு இரவு 09.00மணிக்கு வந்தடைகின்றது.
ஆனால் குறித்த பேருந்தினால் சேவைகளை வழங்கமுடியாத சந்தர்ப்பங்களில் இரவு 08.55மணியளவிலையே குறித்த பேருந்தில் ஆசனம்பதிவு செய்த பயணிகளுக்கு பேருந்துசேவை இடம்பெறாதென்ற தாமதித்த அறிவித்தல் திடீரென வழங்கப்படுகின்றது. இதனால் பயணிகள் அவதியுறுகின்றனர். பயணிகள் உரிய நேரத்தில் உரிய இடங்களுக்குச் சென்று சேரமுயாத நிலை ஏற்படுகின்றது.
ஆகவே இந்தவிடயத்தில் கவனமெடுக்குமாறும் கேட்டுக்கொள்கின்றேன் - என்றார்.
இந்நிலையில் குறித்த விடயம்தொடர்பில் தம்மால் கவனம் செலுத்தப்படுமென போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் பிரதி அமைச்சர் பிரசன்ன குணசேனவினால் தெரிவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.