பேலியகொடை மீன் சந்தையின் ஊழியர் ஒருவர் இன்றைய (19) துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டார். இந்த துப்பாக்கி பிரயோகத்தின் போது, துப்பாக்கி சூட்...
பேலியகொடை மீன் சந்தையின் ஊழியர் ஒருவர் இன்றைய (19) துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டார்.
இந்த துப்பாக்கி பிரயோகத்தின் போது, துப்பாக்கி சூட்டுக்காக இலக்கு வைக்கப்பட்டவர் மாத்திரம் இன்றி, அங்கு வீதியில் சென்ற ஒருவரும் காயமடைந்தார்.
பேலியகொடை ஞானரதன மாவத்தை பகுதியில் இன்று காலை 9:30 மணியளவில் இந்த துப்பாக்கிச் சூடு நடந்துள்ளது.
மோட்டார் சைக்கிளில் பிரவேசித்த இருவர் T - 56 ரக துப்பாக்கியில் இந்த துப்பாக்கிச் சூட்டை நடத்தியுள்ளனர்.
அவர்களில் சந்தேகநபரால் இலக்கு வைக்கப்பட்டவர் இன்று பிற்பகல் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
காயமடைந்த மற்றையவர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வரும் நிலையில், அவரது நிலை கவலைக்கிடமாக இல்லை என்று பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
உயிரிழந்தவர் ஐயப்பன் பிரபு என்ற 40 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.
பேலியகொடை மீன் சந்தையில் வேலை முடித்து வீடு திரும்பிய சந்தர்ப்பத்திலேயே அவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.
கொலை செய்யப்பட்ட நபர் முகத்துவாரம் பகுதியைச் சேர்ந்தவர் என்பதுடன் வெல்லே சாரங்க என்ற குற்றங்களில் ஈடுபடும் நபர் ஒருவரினால் உயிர் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டிருந்த நிலையில் அவர் பேலியகொடவிற்கு மாறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சாரங்கவின் சகோதரனைக் கொலை செய்ய முற்பட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்ததை அடுத்தே, வெல்லே சாரங்கா அவரைக் கொலை செய்வதாக மிரட்டியதாக பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.
கொலை செய்யப்பட்ட நபர் பூங்கொடி கண்ணா என்ற குற்றவாளியின் நெருங்கிய நண்பர் என்றும் பொலிஸார் கூறுகின்றனர்.
பழனி ரிமோஷன் மற்றும் கஞ்சிபாணி இம்ரான் ஆகியோர் இந்தக் கொலைக்கு உதவியிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.