சர்ச்சைக்குரிய பதிவை சமூகவலைதளத்தில் பதிவிட்டிருந்த நிலையில் அதை சென்னை உயர்நீதிமன்றம் கண்டித்திருக்கிறதே என்ற கேள்விக்கு நீதியை வெளியே கொண்...
சர்ச்சைக்குரிய பதிவை சமூகவலைதளத்தில் பதிவிட்டிருந்த நிலையில் அதை சென்னை உயர்நீதிமன்றம் கண்டித்திருக்கிறதே என்ற கேள்விக்கு நீதியை வெளியே கொண்டு வரும் பணிகளில் ஈடுபட்டிருக்கிறோம் என ஆதவ் அர்ஜுனா தெரிவித்துள்ளார். உத்தரகண்ட் மாநிலம், டேராடூனில் தேசிய சப் ஜூனியர் கூடைப்பந்து போட்டி தொடக்க விழாவில் பங்கேற்க ஆதவ் அர்ஜுனா விமான நிலையம் வந்திருந்தார். அங்கு அவரிடம் ஏஎன்ஐ செய்தியாளர் இரு கேள்விகளை எழுப்பியிருந்தார்.
அதில் ஒன்று, சர்ச்சைக்குரிய சமூகவலைதள பதிவை நீங்கள் போட்டது குறித்து சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளதே, அது குறித்து என்ன நினைக்கிறீர்கள் என்று நிருபர் கேட்டார். அதற்கு ஆதவ் அர்ஜுனா, "நீதியை நிலை நாட்டும் பணியில் ஈடுபட்டிருக்கிறோம்" என்றார். மேலும், தவெக மீண்டும் பிரச்சாரத்தை தொடங்குமா என்ற கேள்விக்கு, "உண்மையும் நீதியும் விரைவில் வெளியே வரும்" என பதிலளித்துவிட்டு வேகமாக சென்றுவிட்டார். ஆதவ் அர்ஜுனா டெல்லியில் முகாமிட்டுள்ளார். அவர் கரூர் கூட்ட நெரிசல் விவகாரத்தை சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக் கோரி உச்சநீதிமன்றத்தை நாடவுள்ளார். இதற்காக டாப் வழக்கறிஞர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.
இந்த நிலையில் அவர் கரூர் சம்பவம் நடந்து இரு நாட்கள் கழித்து தனது சமூகவலைதளத்தில், ""சாலையில் நடந்து சென்றாலே தடியடி... சமூக வலைதளங்களில் கருத்து பதிவிட்டாலே கைது.... இப்படி ஆளும் வர்க்கத்தின் அடிவருடிகளாக காவல்துறை மாறி போனால் மீட்சிக்கு இளைஞர்களின் புரட்சி தான் ஒரே வழி.
இளைஞர்களும், ஜென் இசட் தலைமுறையும் ஒன்றாய் கூடி அதிகாரத்திற்கு எதிரான புரட்சியை உருவாக்கிக் காட்டினார்களோ அதே போல இங்கும் இளைஞர்களின் எழுச்சி நிகழும். அந்த எழுச்சிதான் ஆட்சி மாற்றத்திற்கான அடித்தளமாகவும் அரச பயங்கரவாதத்திற்கான முடிவுரையாகவும் இருக்கப்போகிறது. பேய் அரசாண்டால் பிணந்தின்னும் சாஸ்திரங்கள்!" என்று தெரிவித்துவிட்டு கண்டனங்கள் எழுந்த நிலையில் அந்த பதிவை ஆதவ் நீக்கினார். நேற்று சென்னை உயர்நீதிமன்றத்தில் நடந்த வழக்கு ஒன்றில் ஆதவ் அர்ஜுனாவின் பதிவை நீதிபதியிடம் காவல் துறையினர் காட்டினர். அப்போது நீதிபதி செந்தில் குமார், "ஒரு சின்ன வார்த்தையும் பெரிய பிரச்சனை ஏற்படுத்திவிடும். இவர்கள் சட்டத்திற்கு அப்பாற்பட்டவர்களா? நடவடிக்கை எடுக்க நீதிமன்ற உத்தரவுக்காக காத்திருக்கிறீர்களா?. புரட்சி ஏற்படுத்துவது போல கருத்துகளை பதிவிட்டுள்ளார். இதன் பின்புலத்தை விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த விஷயத்தில், பொறுப்பற்ற பதிவுகள் மீது காவல்துறை கவனத்துடன் வழக்கு பதிவு செய்து, அனைத்து சட்டபூர்வமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்'' என தெரிவித்திருந்தார்.