திருகோணமலை மாவட்டம், கிண்ணியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கண்டல்காடு பகுதியில் நேற்று (04) விசேட அதிரடிப்படையினரின் உதவியுடன் 36 கைக்குண்டுகள்...
திருகோணமலை மாவட்டம், கிண்ணியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கண்டல்காடு பகுதியில் நேற்று (04) விசேட அதிரடிப்படையினரின் உதவியுடன் 36 கைக்குண்டுகள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மாவிலாறு குளத்தின் அணை உடைந்ததையடுத்து கிண்ணியா பிரதேசம் வெள்ளத்தில் மூழ்கியிருந்தது. தற்போது வெள்ள நீர் வடிந்து வரும் நிலையில், அப்பகுதியைச் சுத்தம் செய்யும் பணிகளின்போதே இந்தக் கைக்குண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
இதனையடுத்து, விசேட அதிரடிப்படையின் குண்டு செயலிழக்கச் செய்யும் பிரிவினர் வரவழைக்கப்பட்டு, அங்கு கைவிடப்பட்ட நிலையில் இருந்த 36 கைக்குண்டுகளும் மீட்கப்பட்டன.
நீதிமன்ற உத்தரவைப் பெற்று அவற்றைச் செயலிழக்கச் செய்வதற்கான நடவடிக்கைகளில் பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.



