நிலவும் அனர்த்த நிலைமையைக் கருத்திற்கொண்டு நாடெங்கும் அமுல்படுத்தப்பட்டுள்ள அவசர காலநிலையை மேலும் ஒரு மாதத்திற்கு நீட்டிப்பதற்கு அரசாங்கம்...
நிலவும் அனர்த்த நிலைமையைக் கருத்திற்கொண்டு நாடெங்கும் அமுல்படுத்தப்பட்டுள்ள அவசர காலநிலையை மேலும் ஒரு மாதத்திற்கு நீட்டிப்பதற்கு அரசாங்கம் எடுத்த நடவடிக்கை தொடர்பில் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய இன்று (06) பாராளுமன்றத்தில் விளக்கமளித்தார்.
இதன்போது கருத்துத் தெரிவித்த பிரதமர், 'டித்வா' சூறாவளி காரணமாக நாட்டில் பாரிய பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதாகவும், அந்தப் பாதிப்புகளை விரைவாக வழமைக்குக் கொண்டு வருவதற்குத் தேவையான தலையீடுகளை மேற்கொள்வதற்காகவே இந்த அவசர காலநிலையை ஒரு மாதத்திற்கு நீட்டிக்க நடவடிக்கை எடுத்ததாகவும் குறிப்பிட்டார்.
அங்கு தொடர்ந்து உரையாற்றிய பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய,
"டித்வா சூறாவளியினால் இந்த நாட்டுக்கு ஏற்பட்ட பாதிப்புகள் பற்றி நாம் அனைவரும் நன்கு அறிவோம். நாம் எதிர்பாராத விதமாக நாட்டின் உட்கட்டமைப்புகள், குறிப்பாக வீதிகள் மற்றும் பாலங்களுக்கு ஏற்பட்டுள்ள சேதங்கள் குறித்து மீண்டும் மீண்டும் வலியுறுத்தத் தேவையில்லை. மீளக் கட்டியெழுப்பப்பட வேண்டிய மற்றும் சில இடங்களில் இருந்து அகற்றப்பட வேண்டிய பாடசாலைகள் பல உள்ளன என்பது நாம் அனைவரும் அறிந்ததே. அத்துடன் எமது வரலாற்றில் நாம் கண்டிராத வகையில் பாரிய மண்சரிவுகள் ஏற்பட்டுள்ளன. தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (NBRO) இதுவரை சுமார் 1,300 மண்சரிவுகள் குறித்து அறிக்கையிட்டுள்ளது. முன்னெப்போதும் இல்லாத வகையில் எமது உட்கட்டமைப்பு வசதிகள் பாதிக்கப்பட்டுள்ளதுடன், மண்சரிவு அபாயமும் அதிகரித்துள்ளது என்பது அனைவரும் அறிந்த விடயமாகும்.
எனவே, இந்த நிலைமைகளுக்கு மத்தியில் நாம் தலையீடு செய்ய வேண்டியுள்ளது. இந்தத் தலையீடுகளுக்காக மனிதவளம் மற்றும் தேவையான ஏனைய வசதிகளை விரைவாகக் கண்டறிந்து அவற்றைச் செயற்படுத்தவும், ஏற்பட்டுள்ள பாதிப்புகளைச் சரிசெய்து சேதங்களைக் குறைப்பதற்கும் நாம் பாரிய பணிகளை முன்னெடுக்க வேண்டியுள்ளது.
இந்த அவசர காலநிலையை நீட்டிப்பதற்கான அவசியம் இந்தச் சூழ்நிலையினால் மாத்திரமே ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் அத்தியாவசிய சேவைகளைத் தடையின்றிப் பேணுவதும், அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகத்தைப் நியமிப்பதுமே பிரதான நோக்கங்களாகும்.
இந்த இரண்டு பிரதான விடயங்களுக்காகவே நாம் இந்தச் சட்டத்தைப் பயன்படுத்துகின்றோம். தற்போதைய சூழலில் முன்னெடுக்கப்பட வேண்டிய பணிகளை வினைத்திறனாகவும் வேகமாகவும் முன்னெடுத்து, பாதிக்கப்பட்ட பகுதிகள் மற்றும் மக்களின் வாழ்க்கையை வழமைக்குக் கொண்டு வரும் தேவையைக் கருத்திற்கொண்டே இதனை மேலும் ஒரு மாதத்திற்கு நீட்டிக்க பாராளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ளோம்." என்றார்.



