சமூகத்துக்காகவே பத்திரிகையாளர்கள் கடமையாற்றுகிறார்கள். அவர்களின் கடமைக்கு இடையூறு வழங்கக் கூடாது. பத்திரிகையாளர்களை தாக்கவோ தாக்க முயற்சிக்...
சமூகத்துக்காகவே பத்திரிகையாளர்கள் கடமையாற்றுகிறார்கள். அவர்களின் கடமைக்கு இடையூறு வழங்கக் கூடாது. பத்திரிகையாளர்களை தாக்கவோ தாக்க முயற்சிக்கவோ கூடாது” என்று யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிவான் அந்தோனி சாமி பீற்றர் போல், பொலிஸாரை அறிவுறுத்தினார்.

கொக்குவில் பகுதியில் நேற்று இடம்பெற்ற வன்முறைச் சம்பவம் தொடர்பான செய்தியை காணொலிப் பதிவைச் செய்துகொண்டிருந்த ஊடகவியலாளரைத் தாக்கிய கோப்பாய் பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரியை எச்சரித்த நீதிவான், அவரை பிணையில் விடுவித்து வழக்கை ஒத்திவைத்தார்.
கொக்குவில் கருவப்புலம் வீதியில் அமைந்துள்ள வீடொன்றுக்குள் நேற்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் புகுந்த கும்பல் ஒன்று அடாவடியில் ஈடுபட்டுத் தப்பித்தது. வன்முறைச் சம்பவத்தையடுத்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்ததுடன், ஊடகவியலாளர்களும் செய்திகளைப் பதிவு செய்து கொண்டிருந்தனர்.
![]() |
யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிவான் அந்தோனி சாமி பீற்றர் |
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் ஊடகவியலாளர் நடராஜா குகராஜீடம் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது. அதனடிப்படையில் கோப்பாய் பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி அவரது பணியிலிருந்து இடைநீக்கப்பட்டதுடன், விசாரணைக்குட்படுத்தப்பட்டார்.
ஊடகவியலாளரைத் தாக்கிய குற்றச்சாட்டில் பொலிஸ் அதிகாரி எதிராக யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் பொலிஸார் வழக்குத் தாக்கல் செய்தனர். வழக்கு மன்றில் அழைக்கப்பட்ட போது குற்றஞ்சாட்டப்பட்ட நபர் மன்றில் முன்னிலையாகவில்லை. அவர் சார்பில் மூத்த சட்டத்தரணி மு.றெமிடியஸ் முன்னிலையானார்.
சந்தேகநபர் உடல்நலக் குறைவு காரணமாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார் என்று பொலிஸார் மன்றில் தெரிவித்தனர்.
அதனால் சந்தேகநபரை வைத்தியசாலையில் வைத்து விசாரிக்க பொலிஸாருக்கு உத்தரவிட்ட நீதிவான் ஏ.எஸ்.பி.போல், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்குச் சென்றார்.
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் 7ஆம் விடுதியில் சந்தேகநபரான பொலிஸ் அதிகாரி சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டிருந்தார். அங்கு மன்று கூடியது. சந்தேகநபர் சார்பில் மூத்த சட்டத்தரணி மு.றெமிடியஸ் முன்னிலையானார்.
“வன்முறையை அடுத்து பெருமளவானோர் அங்கு கூடியிருந்தனர். தடயவியல் பொலிஸார் வரவழைக்கப்பட்டனர். அத்துடன் மோப்பநாயும் அங்கு கொண்டுவரப்பட்டது.
அதனால் அங்கு கூடியிருந்தவர்களை வெளியேற்றினேன். அப்போதுதான் ஊடகவியலாளர் எனத் தெரியாது முறைப்பாட்டாளரையும் வெளியேற்றினேன். எனினும் அவரை நான் தாக்கவில்லை” என்று பொலிஸ் அதிகாரியான சந்தேகநபர் கூறினார்.
சமூகத்துக்காகவே பத்திரிகையாளர்கள் கடமையாற்றுகிறார்கள். அவர்களின் கடமைக்கு இடையூறு வழங்கக் கூடாது. பத்திரிகையாளர்களை தாக்கவோ தாக்க முயற்சிக்கவோ கூடாது.
சந்தேகநபருக்கு எச்சரிக்கப்பட்டு பிணை வழங்கப்படுகிறது. 50 ஆயிரம் ரூபா பெறுமதியான ஆள் பிணையில் விடுவிக்கப்படுகிறார்” என்று யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிவான் அந்தோனி சாமி பீற்றர் போல் உத்தவிட்டார்.
அத்துடன், வழக்கை வரும் மார்ச் 26ஆம் திகதிக்கு ஒத்திவைத்த நீதிவான், அன்றைய தினம் சாட்சியையும் மன்றில் முன்னிலையாக அழைப்புக் கட்டளை அனுப்புமாறு உத்தரவிட்டார்.