முன்னாள் அமைச்சரின் வீட்டு பணிக்கு சென்ற டயகமை பிரதேசத்தை சார்ந்த சிறுமி பாலியல் வன்கொடுமைக்காளாகி இறந்த சேதி வேதனையை அளிக்கும் அதேவேளை, இச...
முன்னாள் அமைச்சரின் வீட்டு பணிக்கு சென்ற டயகமை பிரதேசத்தை சார்ந்த சிறுமி பாலியல் வன்கொடுமைக்காளாகி இறந்த சேதி வேதனையை அளிக்கும் அதேவேளை, இச்சிறுமிக்கு கொடுமையிழைத்து மரணத்திற்கு காரணமானவர்களின் செயல் கண்டிக்கத்தக்கதும் தண்டிக்கப்பட வேண்டியதொன்றாகும், என சந்திரசேகரன் மக்கள் முன்னணியின் செயலாளர் நாயகமும் சட்டத்தரணியுமான அனுஷா சந்திரசேகரன் தெரிவித்தார்.
இதுகுறித்து மேலும் அவர் தெரிவிக்கையில்
அரசியல், சமூக ரீதியிலான பாகுபாடுகளுக்கும் அப்பால் அனைவரையும் அதிர்ச்சிக்கும் வேதனைக்கும் உள்ளாகியுள்ள டயகம சிறுமியின் மர்ம மரணம் எவ்விதத்திலும் அரசியல் லாபத்திற்காகவோ அல்லது சுய விளம்பரத்திற்காகவும் பயன்படுத்தப்பட்டு விடக்கூடாது.
இந்த மரணத்தை பூதாகரமாக்கி விளம்பரம் தேடும் அதேவேளை இவ்வாறான ஒரு சம்பவம் இனி நடக்காமல் இருப்பதற்கான செயற்திட்டங்களையும் சம்பந்தப்பட்டவர்கள் முன்னெடுக்க வேண்டும்.
இந்த 2021 ம் ஆண்டிலும் வீட்டு வேலை, வீட்டுப்பணிப்பெண் என்றாலே மலையகத்தை நோக்கி படையெடுப்பது வாடிக்கையாகிவிட்டது. இந்நிலை மாறவேண்டும், ஏனைய சமூகங்களை போன்றே எம் மக்களும் சரிசமமாக வாழக்கூடிய சூழல் உருவாக்கப்படவேண்டும் என்பதே
எமது கோரிக்கையாகும்.
வேலையில்லாப் பிரச்சினையும் குடும்ப பொருளாதார சிக்கலையும் முன்னிலைப்படுத்தி வெளியிடங்களுக்கு வேலை தேடி செய்பவர்களை எமது மலையகத்திலேயே தொழில் செய்யும் வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். முறையான அரசியல் திட்டமிடலினூடாக உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தி வருமானத்தை அதிகரிக்கும் நிலையை உருவாக்க வேண்டும். வயது குறைந்தவர்கள் மட்டுமல்ல வயோதிபர்கள் கூட வேலை தேடியலையும் அவல நிலையே இங்கு நிலவுகின்றது.
அதேவேளை பாதிக்கப்பட்ட எம் சமூகத்தை சார்ந்த சிறுமிக்கு நிச்சயமாக நீதி கிடைக்க வேண்டும். சமூக அந்தஸ்தை கருத்திற் கொள்ளாது அதிகாரம் செல்வாக்கு என்பவற்றை புறந்தள்ளி சட்டம் முறையே செயற்பட வேண்டும் என்பதே எமது கோரிக்கையாகும். இது போன்ற பல செயல்கள் இருளினுள் புதைந்து போவது வழமையாகி விட்டது. பதின்ம வயதுகளில் கட்டாயக்கல்வியினையும் புறந்தள்ளி இந்த சிறுமியை குடும்பச்சுமையை காரணம் காட்டி வேலைக்கு அனுப்பிய சிறுமியின் பெற்றோரும் கண்டனத்துகுரியவர்களே. சிறுவர்களுக்காக பாதுகாப்பு அமைச்சு, சிறுவர்களுக்கான தனியான நீதிமன்றம் போன்றன இருந்தும் இதுபோன்ற செயல்கள் சமூகத்தில் பரவலாக நடந்துகொண்டு இருப்பது குடிமக்களுக்கு சட்டம், கட்டமைப்பு நம்பிக்கையினை இழப்பதை வெளிச்சம் போட்டு காட்டுகிறது. அரசு இதுபோன்ற சமூகம் சார் விடயங்களில் கூடிய கவனம் செலுத்துவது காலத்தின் கட்டாயமாகிறது எனவும் தெரிவித்தார்.