பத்திரிகைகளை அச்சிடுவதற்கு பயன்படுத்தப்படும் கடதாசிகளில் ஏற்பட்டுள்ள தட்டுப்பாடு காரணமாக, பத்திரிகை துறை பாரிய சவால்களை எதிர்நோக்கியுள்ளதாக ...
பத்திரிகைகளை அச்சிடுவதற்கு பயன்படுத்தப்படும் கடதாசிகளில் ஏற்பட்டுள்ள தட்டுப்பாடு காரணமாக, பத்திரிகை துறை பாரிய சவால்களை எதிர்நோக்கியுள்ளதாக பத்திரிகை ஆசிரியர்கள் தெரிவிக்கின்றனர்.
நாடு எதிர்நோக்கியுள்ள டொலர் தட்டுப்பாடு காரணமாக, பத்திரிகை துறைக்கு தேவையான கடதாசிகளை கொள்வனவு செய்ய முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது.
அத்துடன், உலக சந்தையில் கடதாசிகளின் விலை பல மடங்காக அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
450 டொலருக்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு தொன் கடதாசி, தற்போது 800 டொலர் வரை அதிகரித்துள்ளது.
இதனால், இலங்கையில் பத்திரிகைக்கு தேவையான கடதாசிகளை இறக்குமதி செய்ய முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது.
இலங்கையில் அச்சிடப்படும் பெரும்பாலான பத்திரிகைகள், பக்கங்களின் எண்ணிக்கையை குறைத்துள்ளதுடன், விலையை அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன், சில பத்திரிகை நிறுவனங்கள் சில பத்திரிகைகளில் வெளியாகும் சஞ்சிகைகளை அச்சிடும் நடவடிக்கையை நிறுத்தியுள்ளதாக அறிய முடிகின்றது,
குறிப்பாக எதிர்வரும் ஓரிரு மாதங்களுக்கு தேவையான கடதாசிகள் மாத்திரமே கைவசம் உள்ளதாக அறிய முடிகின்றது.
இந்த நிலையில், பத்திரிகைகளில் வேலை செய்யும் பலரது வேலை வாய்ப்புக்கள் இல்லாது போகும் அபாயமும் எழுந்துள்ளதாக கூறப்படுகின்றது.