யாழ்ப்பாணத்துக்கு நேற்றைய தினம் விஜயம் செய்த இலங்கைக்கான அமெரிக்க தூதர் ஜூலி சுங் சிவில் சமூக தலைவர்களை சந்தித்து கலந்துரையாடினார். நேற்று ம...
யாழ்ப்பாணத்துக்கு நேற்றைய தினம் விஜயம் செய்த இலங்கைக்கான அமெரிக்க தூதர் ஜூலி சுங் சிவில் சமூக தலைவர்களை சந்தித்து கலந்துரையாடினார்.
நேற்று மாலை பலாலி சர்வதேச விமான நிலையம் ஊடாக யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்த அமெரிக்க தூதர், கொக்குவிலில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் தங்கியுள்ள நிலையில் குறித்த சந்திப்பு இடம்பெற்றது.
இந்த கலந்துரையாடலில் பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான மக்கள் பேரெழுச்சி இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் வேலன் சுவாமி, அரசியல் ஆய்வாளர் நிலாந்தன் உள்ளிட்ட சிலர் கலந்து கொண்டனர்.
சந்திப்பு தொடர்பாக கருத்து தெரிவித்த அமெரிக்க தூதர் ,எந்தவொரு ஜனநாயகத்திலும் பாதிக்கப்படக்கூடிய சமூகங்களின் உரிமைகளுக்காக வாதிடுவதில் சிவில் சமூகம் ஒரு முக்கிய பங்கை வகிக்கிறது. இன்றைய அரசியல் மற்றும் பொருளாதார சவால்கள் குறித்து விவாதிப்பதற்கும் ஜனநாயக இலங்கைக்கான எமது ஆதரவை மீண்டும் வலியுறுத்துவதற்கும் நான் யாழ்ப்பாணத்தில் சிவில் சமூகத் தலைவர்களைச் சந்தித்தேன் – என்றார்.
முன்னதாக, இலங்கைக்கான அமெரிக்க தூதர் ஜூலி சுங்கை யாழ்ப்பாண மாவட்ட பாதுகாப்பு படைகளின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் செனரத் யாப்பா சந்தித்து கலந்துரையாடினார்.
இன்றைய தினமும் அரசியல் கட்சிகளின் தலைவர்கள், சிவில் அமைப்புக்களின் தலைவர்கள், வர்த்தக பிரதிநிதிகள் உள்ளிட்ட பல்வேறு பட்ட பல்வேறு தரப்புகளையும் அமெரிக்கத் தூதுவர் சந்தித்து கலந்துரையாட திட்டமிட்டுள்ளார்.