வெங்கி அட்லூரி இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் வாத்தி. தனுஷ், சமுத்திரகனி, சம்யுக்தா, கென் கருணாஸ் உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர். ஜிவி ...
வெங்கி அட்லூரி இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் வாத்தி. தனுஷ், சமுத்திரகனி, சம்யுக்தா, கென் கருணாஸ் உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர். ஜிவி பிரகாஷ் இசையமைத்திருக்கிறார்.
தனுஷ் நடித்துள்ள திரைப்படம் வாத்தி. வெங்கி அட்லூரி இயக்கியுள்ள இப்படம் தமிழில் வாத்தி என்கிற பெயரிலும், தெலுங்கில் சார் என்கிற பெயரிலும் தயாராகி உள்ளது. இப்படத்தை சித்தாரா நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படத்தில் நடிகர் தனுஷுக்கு ஜோடியாக சம்யுக்தா நடித்துள்ளார். இப்படம் மூலம் டோலிவுட்டில் ஹீரோவாக எண்ட்ரி கொடுத்து உள்ளார் தனுஷ். இப்படத்திற்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் இசையமைத்து இருக்கிறார்.
“வாத்தி படத்தில் தனுஷ் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி தான் ஒரு சிறந்த நடிகர் என்பதை நிரூபித்துள்ளார். எமோஷனல் காட்சிகள் நன்றாக கனெக்ட் ஆகின்றன. ஜிவி பிரகாஷின் பின்னணி இசை காட்சிகளுக்கு வலு சேர்த்துள்ளன. வெங்கி அட்லூரியின் நேர்த்தியான படமாக இது இல்லை” என குறிப்பிட்டுள்ளார்.
“வாத்தி ஓரளவு தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய படமாக உள்ளது. இரண்டு பாதிகளின் இறுதியிலும் நல்ல காட்சிகள் இருந்தாலும், அது நம்பத்தகாத ஒன்றாக உள்ளது. படம் பாதி தமிழிலும் பாதி தெலுங்கிலும் எடுத்துள்ளார்கள். தனுஷுக்கு கேக்வாக் ரோல் இது. சம்யுக்தா மற்றும் கென் கருணாஸின் நடிப்பும் சூப்பர். ஜிவி பிரகாஷின் இசை படத்திற்கு மிகப்பெரிய பலமாக அமைந்துள்ளது.
“வாத்தி டப்பிங் படம் போன்ற உணர்வை தருகிறது. சொல்ல வர விஷயம் ஓகே ஆனால் சொன்ன விதம்.. ஒன்னும் சொல்றதுக்கு இல்ல. முதல் பாதி சுமார். அங்கங்க 2 சீன் நல்லா இருக்கு” என பதிவிட்டு இருக்கிறார்.
“ரசிகர்களை ஊக்குவிக்கும் படங்களின் பட்டியலில் வாத்தி இணையும். வழக்கம் போல தனுஷ் மாஸ் காட்டி உள்ளார். திரைக்கதைக்காகவே இயக்குனர் வெங்கி அட்லூரிக்கு பாராட்டுக்கள். ஜிவி பிரகாஷ் பின்னணி இசை சிறப்பு. சமுத்திரக்கனி, சம்யுக்தா, கென் ஆகியோர் கொடுத்த வேலையை கச்சிதமாக செய்துள்ளார்கள். மொத்ததில் வாத்தி செஞ்சுரி அடித்துள்ளார்” என பதிவிட்டுள்ளார்.
இவ்வாறு பல்வேறு கருத்துக்கள் முன்வைக்கப்பட்டுள்ளது வாத்தி படம் பற்றி. இவ்வாறு இருப்பினும் வாத்தி திரைப்படத்தின் போக்கு எவ்வாறு உள்ளது என பின்வருமாறு பார்ப்போம்.
வாத்தியின் கரு என்ன? என் பார்த்தால் ஆடியோ வெளியீட்டு விழாவிலேயே தனுஷ் படத்தின் ஒன்லைனை கூறிவிட்டார். அவர் கூறியதுபோலவே தனியார்மயமாக்கலால் அரசு பள்ளிக்கூடங்களுக்கு சந்திக்கும் அல்லது சந்தித்த ஆபத்து. அதன் மூலம் கல்வி எப்படி வியாபாரம் ஆகியிருக்கிறது என்பதை சொல்ல முயன்றிருக்கிறார்கள் வெங்கியும், தனுஷும். ஆனால் துரதிருஷ்டவசமாக அவர்களின் முயற்சி முயன்றார்கள் என்றதோடு நின்றுகொண்டதுதான் வருத்தம்.
எப்படி இருக்கிறார் வாத்தி? கல்வி வியாபாரம் ஆவதால் வரும் விளைவுகளை வைத்து தமிழில் ஏற்கனவே படங்கள் வந்திருக்கின்றன. ஆனால் இப்போது எல்லாமும் தனியார்மயமாகும் சூழல் உருவாகியிருக்கும் நிலையில் இப்படிப்பட்ட படத்தை கொடுக்க நினைத்ததை ஏற்றுக்கொள்ளலாம். ஆனால் அதற்குள் வெங்கி அட்லூரி செய்திருப்பதைத்தான் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. வாத்தியார் பாலமுருகனாக தனுஷ். வழக்கம்போல் நடிப்பில் பின்னியிருக்கிறார். இருப்பினும் அசுரன், திருச்சிற்றம்பலம் என நடிப்பில் கேஷுவலாக கலக்கிய தனுஷ் இதில் கொஞ்சம் சிரமப்பட்டிருக்கிறாரோ என்றே தோன்றுகிறது. ஏனெனில் தனுஷ் என்பவர் ஒரு எஃபர்ட் லெஸ் நடிகர். ஆனால் இதில் அவர் எஃபர்ட் எடுத்திருப்பது அப்பட்டமாகவே தெரிகிறது.
அதேபோல் தனுஷின் இளமை ஒருபக்கம் ப்ளஸ்ஸாக இருந்தாலும் இந்தப் படத்தில் அது கொஞ்சம் துருத்தலாகவே இருந்தது. ஏனெனில் இவர் மாணவரா இல்லை வாத்தியாரா என்ற குழப்பம் ஏற்பட்டது. அந்த குழப்பத்தை தீர்ப்பதற்கு இயக்குநர் வாத்தி பாலமுருகனுக்கு காஸ்டியூமை கொஞ்சம் மாற்றியிருக்கலாம். பள்ளி மேல் பக்தி இருக்கலாம்தான் ஆனால் சதா காலமும் யூனிஃபார்மோடு சுற்றும் அளவு இருக்கும் பக்திதான் கொஞ்சம் பயமுறுத்தியது.
தெலுங்கிலிருந்து வந்து தமிழில் இயக்குநர்கள் படம் இயக்குவது ஆரோக்கியமான விஷயம்தான். ஆனால் தமிழில்தான் நாம் படம் எடுக்கிறோம் என்பதை மறந்துவிட்டு லொகேஷன் முதல் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட்வரை தெலுங்கு வாடை அடிக்க வைப்பதெல்லாம் அபத்தத்தின் உச்சம். இந்தப் படம் 90களில் நடப்பதாக உருவாக்கப்பட்டிருக்கிறது. ஆனால் அந்த காலகட்டத்தை கண்முன் நிறுத்துவதில் இயக்குநர் தோல்வியடைந்துள்ளார். மேலும், சூட்டிங் பிடித்திருக்கும் லொகேஷன் தமிழ்நாடு – ஆந்திரா பார்டர். பைலிங்குவல் படம் என்பதை லொகேஷனிலும் அப்ளை செய்துவிட்டார்போல இயக்குநர். (என்னா ஒரு டெடிகேஷன்)
இதனால்தான், கதையோடும், கதை நிகழும் இடத்தோடும் தமிழ் ரசிகர்கள் ஒன்ற முடியாமல் தியேட்டரில் நெளியப்போவது நிச்சயம். அதிலும் வாத்தியிடம், திருப்பதி வசனம் பேசும் ஒரு இடத்தில் ‘இதான் இன்னைக்கு ட்ரெண்ட்’ என்கிறார். ட்ரெண்ட் என்கிற வார்த்தையே கடைசி 10 வருடங்களாகத்தான் ட்ரெண்டிங்கில் இருக்கிறது. ஆனால் வாத்தி இயக்குநருக்கு மட்டும் 1999ஆம் ஆண்டே தெரிந்திருக்கிறது போல. அதேபோல் ஒரு காட்சியில், தமிழ் வாத்தியாரை அறிமுகப்படுத்தும்போது எதற்காக அவ்வளவு டம்மியாக காட்ட வேண்டும் என்பது புரியவில்லை.
வாத்தி கவரும் விடையங்கள் எவை எனப் பார்த்தால் அதற்காக படத்தில் நன்மைகள் இல்லையா என கேட்டால் இருக்கிறது. சாதி குறித்த ஒரு காட்சியில்.. இயக்குநர் வெங்கி அட்லூரி கவனம் ஈர்த்திருக்கிறார். மாணவர்கள் மத்தியில் சாதி ஏற்றத்தாழ்வை போக்கும் விதமாக தனித்தனியாக பாடம் எடுப்பதும்; அதன் பிறகு வாத்தி வைக்கும் ட்விஸ்ட்டும் ஈர்க்கும்படி இருக்கின்றன. மேலும் சாதி ஒழிப்பு குறித்து பிரசார நோக்கத்தில் வசனம் எதுவும் எழுதாமல்; மைல்டாகவும் அதேசமயம் போல்டாகவும் வாத்தியை அவ்வாறு செய்ய வைத்ததற்கு கை தட்டலாம்.
அதேபோல், தேர்வு முடிவுகள் வந்த பிறகு மாணவர்களிடம் தனுஷ் எடுக்கச்சொல்லும் ஒரு முடிவு ஈர்க்கும்படி இருக்கின்றன. உணர்ச்சி பெருக்குக்குள் அடங்கி மற்றவர்களின் எதிர்காலத்தை சுருக்காமல் தனக்கு கெடுதல் விளைவிக்கும் ஒருவரின் ஈகோவை பயன்படுத்தி தானும் வளர்ந்து (நல்ல விஷயத்துக்காக) மற்றவர்களின் எதிர்காலத்தையும் முன்னேற்ற சொல்லும் முடிவில் வாத்தி பாலமுருகன் அப்ளாஸ் அள்ளுகிறார்.
சொல்லும் கருத்து ஒருகட்டத்துக்கு மேல் ஊரைவிட்டு துரத்தப்படும் வாத்தி திரையரங்கில் பாடம் எடுக்கிறார். அதற்கு ஊறுகாயாக அருணாச்சலத்தை தொட்டுக்கொள்கிறார் இயக்குநர். ஆனால் திரையரங்குக்குள் நடத்தப்படும் பாடம் எப்படி வெளியில் யாருக்குமே பல நாள்கள் தெரியாமல் இருக்கும் என்ற கேள்வி எழுகிறது. மாறுவேடம் அணிந்து வரும் தனுஷை பார்த்ததும் ஒருவித பரிதாப உணர்வே தோன்றியது. அய்யோ வாத்தியார் பாலமுருகனுக்கு இந்த நிலையா என்ற பரிதாபம் இல்லை அது அய்யோ நம்ம தனுஷுக்கா இந்த நிலைமை என்ற பரிதாப உணர்வு அது. தனுஷை பாடாய் படுத்தியிருக்கிறார் இயக்குநர் வெங்கி அட்லூரி. சுருக்கமாக சொல்ல வேண்டுமென்றால் மெசேஜ் சொல்கிறேன் என்கிற பெயரில் எந்த இயக்குநர் வந்தாலும் இனி எச்சரிக்கையாக இருங்கள் என பாடம் எடுத்திருக்கிறார் வாத்தி தனுஷ்.
நாயகிக்கு முக்கியத்துவம் இருக்கிறதா? தமிழ் சினிமா இயக்குநர்கள் இப்போதுதான் நாயகிகளை மையமாக வைத்து படங்கள் இயக்கும் ஆரோக்கியமான பாதைக்கு திரும்பியிருக்கிறார்கள். ஆனால் வம்சி, வெங்கி அட்லூரி போன்றவர்கள் மீண்டும் கதாநாயகிகளை பேச்சுக்கு வந்து போகும் கதாபாத்திரமாக மாற்ற முயன்று கொண்டிருக்கிறார்களோ என்ற அச்சம் நிச்சயமாக எழுகிறது. ஏனெனில் இந்தப் படத்தில் சம்யுக்தாவின் கேரக்டரை இன்னும் வெளிக்கொண்டு வந்திருக்க வேண்டும். ஆனால் இயக்குநரை அதற்கு எது தடுத்ததோ தெரியவில்லை. பேருக்கு வந்து போகிறார்.
வாத்தி கொடுக்கும் ஆறுதல் என்ன? வாத்தி படத்தில் ஒரே ஆறுதல் சந்தேகமே இல்லாமல் ஜிவி பிரகாஷ்தான். பாடல்களாகட்டும், பின்னணி இசையாகட்டும் மனிதர் புகுந்து விளையாடியிருக்கிறார். வா வாத்தி பாடலும், பத்து தல ராவணன் பாடலும் செம ரகம். குறிப்பாக பின்னணி இசை. ஒவ்வொரு காட்சிக்கும் அருமையாக இசையமைத்திருக்கும் ஜிவி பிரகாஷ், இரண்டாம் பாதியில் வரும் ஒரு சண்டை காட்சிக்கு ஒட்டுமொத்தமாக வேறு ஜானரில் அமைத்திருக்கும் பின்னணி இசை சூப்பர் ரகம்.
வியாபாரத்திற்காக கல்வி வியாபாரத்தை விற்ற கதை
கல்வி வியாபாரம் ஆவதை சொல்ல நினைத்தது நிச்சயம் நல்ல விஷயம்தான். ஆனால் அதை இப்படி கமர்ஷியலை கலந்துகட்டி சொல்லியிருப்பது தேவையற்ற ஒன்று. கல்வி விழிப்புணர்வு குறித்து வந்த படங்களில் தனுஷும், வெங்கி அட்லூரியும் ஒருமுறை வாகை சூட வா படத்தை பார்த்திருக்க வேண்டும். இதுவரை பார்க்கவில்லை என்றால் இனியாவது பார்க்க வேண்டும். அந்தப் படமும் இந்த ஜானரை சேர்ந்ததுதான். இருப்பினும் அந்தப் படம் தேசிய விருது வென்றதற்கும், மக்கள் மனதை வென்றதற்கும் காரணம் என்னவென்றால்; அது நம் மண்ணோடு பிணைந்து மக்களின் வலிகளை யதார்த்தமாக சொன்னது.
வாத்தி அப்படி இல்லை. இந்த ஒன்லைனை கமர்ஷியல் இல்லாமல் ஒரு பக்கா சமூக கருத்துள்ள திரைப்படமாக காட்சிப்படுத்தியிருக்கலாம். ஆனால் இன்டஸ்ட்ரியில் தனுஷ் என்ற ஸ்டாரை வைத்து நடக்கும் வியாபாரத்திற்காக இந்த ஒன்லைனையும் வியாபாரத்திற்காக டெவலப் செய்திருக்கிறார்கள். சுருக்கமாக சொல்ல வேண்டுமென்றால் கல்வி வியாபாரம் ஆவதை தடுக்க வேண்டும், அதுகுறித்த விழிப்புணர்வை மக்களிடம் கொண்டு போக வேண்டும் என்ற நல்ல நோக்கத்தை வியாபாரத்திற்காக கெடுத்து வாத்தி என்ற பெயரில் விற்றிருக்கிறார்கள்...!
அருமை .....
என்.ரிலக்க்ஷனா
ஊடகக் கற்கை இறுதி ஆண்டு மாணவி
யாழ்.பல்கலைக்கழகம்
ஊடகக் கற்கை இறுதி ஆண்டு மாணவி
யாழ்.பல்கலைக்கழகம்