சர்வமதங்களின் புரிந்துணர்வே சமாதானத்திற்கான வழியாகும் ஆக்கம் : மரியதாஸ் நியூட்டன் யாழ்ப்பாணம் கரித்தாஸ் கியூடெக் சர்வமத சகவாழ்வு நிகழ்ச்சித்...
சர்வமதங்களின் புரிந்துணர்வே சமாதானத்திற்கான வழியாகும்
ஆக்கம் : மரியதாஸ் நியூட்டன்
யாழ்ப்பாணம் கரித்தாஸ் கியூடெக் சர்வமத சகவாழ்வு நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் இந்து, கிறிஸ்தவம், முஸ்லிம், பௌத்தம் மதங்கள் வாழும் பிரதேசங்களைத் தெரிவு செய்து குறிப்பாக இந்து, கிறிஸ்தவ, முஸ்லிம் மக்கள் வாழும் பிரதேசங்களான நாவாந்துறை, பொம்மவெளி, மூர்வீதி, சாட்டி, நயினாதீவு போன்ற கிராமங்களில் சர்வமதத் தலைவர்கள். சமூகத் தலைவர்கள், பெற்றோர், முதியோர், இளையோர், சிறுவர்கள், உள்ளடங்களான சர்வமத சகவாழ்வு திட்டங்களை முன்னெடுத்து சர்வமத சகவாழ்வு சமாதான செயற்திட்டங்களை முன்னெடுத்து மக்களுக்கிடையே சமாதானத்தை உருவாக்குவதில் பல முயற்சிகளைச் செய்து வருகின்றனர்.
இதில் இளையோர் சிறுவர்களுக்கான குழுக்கள் மூலம் மாதாந்த நிகழ்ச்சித் திட்டம் ஊடாக முரண்பாடற்ற தொடர்பாடல், கற்கை நெறி மூலம் சமாதான நல்லெண்ண சிந்தனைகளை தூண்டும் ஒவியம், பாடல், நாடக உருவாக்கம் மூலம் நற்சமூகத் தலைவர்கள் உருவாக்குதல், இந்து, கிறிஸ்தவம், முஸ்லிம் தமது பிற மத சமூகத் தொடர்பற்ற நிலையில் இருந்து இன்று அதில் மாற்றம் அடைந்து சமயத் தலைவர்களும், சமூகத் தலைவர்களும் சமாதான நல்லிணக்க சந்திப்புக்கள் பயிற்சிகள் மூலம் நல்லுறவும் புரிந்துணர்வான செயற்பாடுகளிலும் ஈடுபட்டதுடன் தென் இலங்கை மக்களுடனான வெளிக்களச் சுற்றுலாக்களும், மொழிக் கற்கை நெறிகளும், சர்வமத பண்டிகையிலும் கலந்து கொண்டு நல்லுறவை பலமாக்குதல் வீட்டுத்தோட்டம், மரநடுகை, விளையாட்டுப் போட்டிகள் சுற்றுப்புறச் சூழல் சுத்திகரிப்புகளால் சமூகத்தில் நல்ல அபிப்பிராயங்கள் வளர்ந்து சர்வமத சகவாழ்வு திட்டத்தின் மூலம் நற்சமூகம் மலர உதவியது.
ஏனைய கிராமியக் குழுக்களின் நல்லுறவு சந்திப்புக்களால் குடும்பங்களிடையே நடைபெறும் நன்மை, தீமைகளில் பங்கேற்கவும் பிற சமய கலாச்சார விழாக்கள், ஒன்றுகூடல்கள் மூலம் தனி நபர்களிடையே தலைமைத்துவப் பண்புகள் வளரவும் இளையோர்களை வலுப்படுத்தியமை இந்த அமைப்பால் சர்வ மதவாழ்வு மக்களின் மனநிலையில் பாரிய மாற்றத்தை ஏற்படுத்தியிருந்தது
இந்த நிகழ்ச்சித்திட்டம் ஆரம்பிக்கின்றபோது இந்து, முஸ்லிம், கிறிஸ்தவ மத மக்களும் கலந்து வாழுகின்ற பிரதேசங்களை குறிப்பாக நாவாந்துறை, பொம்மவெளி, நாவற்குழி போன்ற இடங்கள் மாவட்ட அரசாங்க அதிபர் பிரதேச செயலர்களின் அனுமதியுடன் குறித்த பகுதிகளுக்கு கள விஜயங்களை மேற்கொண்டு கிராம அலுவலர் ஊடாக சமூக மட்ட தலைவர்களை சந்தித்து மக்களை ஒன்று திரட்டி களகங்கள் உருவாக்கப்பட்டது. இத்தகைய கழகங்களை ஆரம்பத்தில் உருவாக்குகின்றபோது தமிழ் முஸ்லிம் அல்லது இந்து, கிறிஸ்தவம் , இஸ்லாம் மதங்களுக்கு இடையிலே தொடர்பாடல்கள் இல்லாத நிலை காரணமாக ஆரம்ப கட்ட கலந்துரையாடல்களில் மக்களின் பங்கேற்பானது குறைந்தளவிலேயே இருந்து பின்னர் தொடர்ச்சியான தெளிவுபடுத்தல்கள் வழங்கப்பட்டதன் பின்னர் இந்து, முஸ்லிம், கிறிஸ்தவ, பௌத்த மதங்களைப் பின்பற்றுபவர்கள் தங்களுக்குள்ளான தொடர்பாடல்களைப் பேணி தங்களுக்கான கசப்புணர்வுகளை களையத் தொடங்கினார்கள் அது மட்டுமன்றி கலந்துரையாடலில் கலந்து கொண்டவர்கள் தங்களுடை ஏனைய சமூகத்தினருக்கு தெளிவூட்டல்களை வழங்கி அவர்களையும் விழிப்படையச் செய்தனர். .
இக் காலப் பகுதியில் கொரோனாத் தாக்கம் அதன் பின்னரான பொருளாதாரத் தடை போன்றவற்றால் கடும் பாதிப்புக்குள்ளான இந்த மக்களுக்கு கரித்தாஸ் கியூடெக் நிறுவனமானது தங்களால் ஆன உதவிகளைச் செய்து இந்த மக்களை கொரோனாவில் இருந்தும் பொருளாதாரப் பிடியில் இருந்தும் ஓரளவேனும் பாதுகாத்து வைத்திருக்கின்றார்கள்
இம் மக்கள் இத்தகைய முயற்சிகளை வரவேற்பதுடன் இவ்வாறான முயற்சிகள் தொடரவேண்டும் என்பதுடன் இன்னும் விரிவடையச் செய்யவேண்டும் என்ற ஆவலைக் கொண்டுள்ளார்கள் குறிப்பாக கரித்தாஸ் கியூடெக் நிறுவனம் இவ்வாறான முயற்சிகள் செய்வது போன்று மக்களுக்காக செய்யப்படுகின்ற அரச சார்பற்ற நிறுவனங்கள் இவ்வாறான முயற்சிகளில் இணைந்து ஈடுபடவேண்டும் என விரும்புகின்றார்கள் சர்வமத சகவாழ்வு செயற்றிட்டத்தில் இஸ்லாம் மதத்தைச் சேர்ந்த பெண்கள் இந்த அமைப்புக்குள் வருவதை விரும்பவில்லை அவர்களுடைய மதம், சமூக கட்டமைப்பு சில தடைகளை ஏற்படுத்துகின்ற நிலை உள்ளதாக எண்ணியிருந்தார்கள் எனினும் இஸ்லாம் மதத் தலைவர்களுடைய வழிகாட்டுதல் மற்றும் தெளிவு படுத்தல்களால் அவர்களுடைய மனநிலையில் மாற்றம் ஏற்பட்டு ஏனைய மதப் பெண்கள் மாதிரி பல பங்குபற்றுதல்களில் பங்கு பற்றி தங்கள் சமூகத்தை முன்னேற்றப் பாதைக்கு இட்டுச் சென்றுள்ளார்கள். இவர்களைப் போன்றே ஏனைய மதங்களிலுள்ள பெண்களும் தங்களுடைய மன நிலைகளை மாற்றி இணைந்து செயற்பட்டார்கள்.
சர்வமத சகவாழ்வு அமைப்பானது சிறுவர்கள் இளைஞர்களுக்கு மொழி ரீதியான கற்பித்தல்களை சமூதாய விழிப்புணர்வுகள், வீதி நாடகம் ஊடான விழிப்புணர்வுகள் சித்திரம் வரைதல் போதை வஸ்து தொடர்பான விழிப்புணர்வகள் மதங்களுக்கு இடையிலான நல்லுறவுகள் போன்ற விடையங்களை செய்துள்ளது. குறிப்பாக வீதி நாடகத்தின் ஊடாக போதைவஸ்து பாவனை தொடர்பாக எடுத்துக்கூறிய போது அதில் கலந்து கொண்டவர்கள் முறையான தெளிவூட்டல்களைப் பெற்றுக் கொண்டு தங்களுடைய உறவுகள் தொடர்பிலும் அவர்களின் செயற்பாடுகள் தொடர்பிலும் அறிந்து கொண்டதுடன் இதனைப் பயன்படுத்துபவர்கள் தொடர்பாகவும் தங்கள் சமூக அமைப்புக்களுக்குத் தெரியப்படுத்தி போதைவஸ்து பயன்பாட்டை ஓரள வேணும் தடுத்துள்ளமை விசேடமாக சுட்டிக்காட்டப்படவேண்டிய விடையமாகும் . மேலும் இவ் அமைப்பின் ஊடாக சுயதொழில் முயற்சிக்கான பயிற்சிகள் சுயசேமிப்புக்கள் போன்றவை உருவாக்கப்பட்டு குறிப்பாக பெண்கள் தாங்களே ஒரு தொழில் முயற்சியாளர்களாக உருவாக்கிய பெருமை இந்த அமைப்பைச் சாரும் பெண் தலைமைத்துவக் குடும்பங்கள் தங்களுடைய வருவாயைப் பெற்றுக் கொள்ளக்கூடிய வகையில் இந்த முயற்சிகள் உதவியிருந்தது. இந்தப் பயிற்சிகளைப் பெற்றவர்கள் தங்களுடைய சமூகத்தில் மட்டுமன்றி இந்த அமைப்பின் ஊடாக ஏனைய இடங்களுக்கும் தங்கள் தொழில்களைக் கொண்டு சென்று கண்காட்சிப் படுத்துதல், விற்பனை செய்தல் அதன் மூலம் தொடர்ச்சியான வியாபாரத்தை மேற்கொள்ளல் என்ற சிறந்ததொரு அடைவு மட்டத்தை எட்டியுள்ளார்கள்.
ஆரம்பத்தில் பிறமதங்களைப் பற்றி கதைப்பதற்கோ சென்று வருவதற்கோ அச்சமான நிலை காணப்பட்ட போதும் தற்போதைய சூழலில் அனைத்து மதங்களினதும் கலை, கலாச்சார, பண்பாட்டு, விழுமியங்களை அறிந்து நான்கு மதங்களுடைய நிகழ்வுகளிலும் கலந்துகொண்டு உறவு நிலையை வளர்த்து வருகின்றார்கள். இதுவரை காலத்திலும் இருந்து வந்த மதங்கள், இனங்களுக்கு இடையிலான வேறுபாடுகள் களையப்பட்டுள்ளது. இத்தகைய செயற்றிட்டங்கள் இன்னும் பல பிரதேசங்களில் மேற்கொள்வதன் மூலம் மதங்களுக்கு இடையிலான நல்லுறவை ஏற்படுத்தி சமாதானத்தை ஏற்படுத்த முடியும் என்பதே இவர்களது எண்ணமாகும்.