QR முறையை உள்ளடக்கிய சாரதி அனுமதிப் பத்திரங்களை விநியோகிக்கும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக மோட்டார் வாகன திணைக்களம் தெரிவிக்கின்றது. டி...
QR முறையை உள்ளடக்கிய சாரதி அனுமதிப் பத்திரங்களை விநியோகிக்கும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக மோட்டார் வாகன திணைக்களம் தெரிவிக்கின்றது.
டிஜிட்டல் அல்லது ஸ்மார்ட் சாரதி அனுமதிப் பத்திர திட்டத்தை அறிமுகப்படுத்தும் நோக்கில் இந்த திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக மோட்டார் வாகன திணைக்கள ஆணையாளர் நாயகம் நிஷாந்த அநுருத்த தெரிவித்துள்ளார்.
கடந்த ஒக்டோபர் மாதம் அமைச்சரவை வழங்கிய அனுமதியை அடுத்து இந்த திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
சாரதி அனுமதிப் பத்திரங்களை அச்சிடும் நடவடிக்கைகளை இலங்கை இராணுவத்தின் ஒத்துழைப்புடன் முன்னெடுத்து வருவதாகவும் அவர் குறிப்பிடுகின்றார்.
நாடு எதிர்நோக்கிய பொருளாதார நெருக்கடி தருணத்தில், சாரதி அனுமதிப் பத்திரங்களுக்கான சிப்களை இறக்குமதி செய்வதில் சிரமம் காணப்பட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
இதையடுத்தே, QR நடைமுறையை சாரதி அனுமதிப் பத்திரத்தில் அறிமுகப்படுத்த தீர்மானித்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.
இந்த திட்டத்தின் பிரகாரம், QR இலக்கங்களை பொலிஸார் மற்றும் மோட்டார் வாகன திணைக்களத்திற்கு மாத்திரமே இயக்க முடியும் என அவர் சுட்டிக்காட்டினார்.
இந்த ஸ்மார்ட் சாரதி அனுமதிப் பத்திரத்தின் ஊடாக, போக்குவரத்து குற்றங்களுக்கான புள்ளிகளை குறைக்கும் நடைமுறையும் உள்ளடக்கப்பட்டுள்ளதாக மோட்டார் வாகன திணைக்கள ஆணையாளர் நாயகம் நிஷாந்த அநுருத்த தெரிவித்துள்ளார்.