நாம் எடுக்கும் தீர்மானங்களினால் இந்த நாட்டின் எதிர்காலப் பொருளாதாரம் எவ்வாறு அமையும் என்பதைச் சிந்திக்க வேண்டும். நாம் கலந்துரையாட வேண்டும...
நாம் எடுக்கும் தீர்மானங்களினால் இந்த நாட்டின் எதிர்காலப் பொருளாதாரம் எவ்வாறு அமையும் என்பதைச் சிந்திக்க வேண்டும். நாம் கலந்துரையாட வேண்டும். அவை பற்றி அரசியல் கட்சிகள் கலந்தாலோசிக்க வேண்டும். அவர்கள் தேர்தலுக்குச் செல்ல வேண்டும் என்றால், இந்த நாட்டின் பிரச்சினைகளை எவ்வாறு தீர்ப்பது என்பது அவர்களுக்குத் தெரிந்திருக்க வேண்டும் என ஜனாதிபதி தெரிவித்தார்.
கொழும்பில் நடைபெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே இதனை தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில்,நிலவிலிருந்து அரிசி கொண்டுவருவதாக கட்டுக் கதைகளை கூறி அதனை செய்ய முடியாது. தற்போது எம்மால் முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டங்களுக்கு இணங்க முடியுமா? அல்லது அவற்றை மாற்றியமைக்க வேண்டுமா? என்பது தொடர்பில் ஆலோசிக்க வேண்டும்.
நாம் தற்போது சர்வதேச நாணய நிதியத்துடனான ஒப்பந்தத்தை கைசாத்திட்டுள்ளோம். அந்த ஒப்பந்தம் இன்னும் 15 – 16 நாடுகளுடன் கைசாத்திடப்படவுள்ளது. அதிலிருந்து நாம் விடுபட்டுச் செல்ல முடியாது. அதனை நாம் எவ்வாறு ஏற்றுக்கொள்வது. அது தொடர்பில் நாம் அனைவரும் கலந்தாலோசிக்க வேண்டும். ஆனால் இன்றும் எமது அரசியல், அப்பளத்தை போலவே உள்ளது. பொரித்தவுடன் அதனை எடுத்து சாப்பிடுகிறோம். மறுதினம் மற்றொன்றை போடுகிறோம் பின்னர் அதனை மறந்துவிடுவோம்.
சமூக ஊடகங்கள் தொடர்பிலான சட்டம் கொண்டுவரப்பட்ட போது நாட்டில் கருத்துச் சுதந்திரம் பறிக்கப்படுகிறது எனக் கூச்சலிட்டனர். இருப்பினும் சட்டம் நிறைவேற்றப்பட்டது. தற்போது அதனை அனைவரும் மறந்துவிட்டனர். அதேபோல் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலம் சமர்பிக்கப்படவுள்ளது. இதன்போதும் மக்களின் உரிமை மீறப்படுகிறது, அனைவரையும் சிறையில் அடைக்க போகிறார்கள் எனக் கூச்சலிடுவர். பின்னர் அதை மறந்துவிடுவார்கள்.
அதன் பின்னர் தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு சட்டமூலம் சமர்பிக்கப்படும் போது கல்வி ஒழிக்கப்படுவதாக கூச்சலிடுவர். பின்னர் மறந்துவிடுவார்கள். அப்பளத்தை போல் மேலே வந்த பின்னர் சத்தம் குறைந்துவிடும். இந்த அரசியலுக்கு என்னால் முடிவுகட்ட முடியாது. இருப்பினும் அவ்வறான அரசியலே எமது நாட்டின் இந்த நிலைக்கு காரணம் என்பதை கூற முடியும்.
எமது நிலையிலிருந்து எழுந்து முன்னேறிச் செல்வதற்கான இயலுமை எமக்கு இருக்க வேண்டும். அதனால் உங்களுடைய எதிர்காலம் மாத்திரமின்றி உங்கள் பிள்ளைகளின் எதிர்காலமும் சிறக்கும். அதனால் சர்தேச நாணய நிதியத்துடனான ஒப்பந்தம் அவசியமா? இல்லையா? மாற்றங்கள் அவசியமா என்பதை பாராளுமன்றத்தில் ஆலோசிக்க வருமாறு அரசியல் கட்சித் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கிறேன்.
அதேபோல் சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவப் பணிப்பாளரை இங்கு அழைக்கவும் நாம் தயாராக இருக்கிறோம். அவருடன் அனைவரும் கலந்தாலோசிக்கலாம். ஒப்பந்தத்தை மாற்றுவதற்கான வழிகள் இருந்தால் அதனை எவ்வாறு செய்யலாம் எனக் கூறுங்கள். நல்ல திருத்தங்களை நாம் ஏற்றுக்கொள்வோம். இருப்பினும் தற்போதுள்ள ஒப்பந்தத்திற்கு அமைவான செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்பதையும் நாம் மறந்துவிடக்கூடாது.” என்று ஜனாதிபதி தெரிவித்தார்.