தெல்லிப்பழை பொலிஸாருக்கு எதிராக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் இலங்கை ஆசிரியர் சங்கத்தினால் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. தெல்லிப்...
தெல்லிப்பழை பொலிஸாருக்கு எதிராக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் இலங்கை ஆசிரியர் சங்கத்தினால் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
தெல்லிப்பழை யூனியன் கல்லூரி இல்ல மெய்வல்லுனர் போட்டியில் இல்லங்கள் அலங்கரிப்பு செய்யப்பட்டமை தொடர்பாக பாடசாலை மாணவர்கள், அதிபர், ஆசிரியர்கள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டமைக்கு எதிராகவே முறைப்பாடு பதிவாகியுள்ளது.
இலங்கை ஆசிரியர் சங்க பிரதிநிதிகள் இன்று யாழ்ப்பாணத்தில் உள்ள இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பிராந்திய அலுவலகத்தில் முறைப்பாட்டை பதிவு செய்தனர்.
பாடசாலைகளில் நடைபெற்றுவரும் இல்ல விளையாட்டு நிகழ்வுகளில் அலங்கரிக்கப்படும் செயற்பாடுகள் தொடர்பாக – குறிப்பாக, வடக்கு கிழக்கு மாகாண பாடசாலைகளில் பொலிசாரினதும் இராணுவத்தினரதும் , அரச புலனாய்வாளர்களினதும் அச்சுறுத்தல் இடம்பெற்றுவருவது தனிமனித சிந்தனை மற்றும் மனச்சாட்சி சுதந்திரங்களை நசுக்கும் அடிப்படை மனித உரிமை மீறல்களாகும்.
இலங்கை அரசின் சட்ட வரையறைக்குட்பட்டு கருத்தியல் ரீதியாகவும் – கலை ரீதியாகவும் – குறியீட்டு வடிவங்கள் மூலமாகவும் – சமூகம் சார் பிரக்ஞைகளை வெளிப்படுத்தும் போது, அதனை அரச இயந்திரங்களால் நசுக்கும் செயற்பாடுகள் நடைபெறுவதற்கு அனுமதிக்க முடியாது – என முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.