கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும் 75 புதிய சட்டங்களை அரசாங்கம் நிறைவேற்றியுள்ளதாகவும் தெற்காசியாவில் புதிய சட்டங்களைச் செயற்படுத்தும் நாடாக இல...
கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும் 75 புதிய சட்டங்களை அரசாங்கம் நிறைவேற்றியுள்ளதாகவும் தெற்காசியாவில் புதிய சட்டங்களைச் செயற்படுத்தும் நாடாக இலங்கை மாறியுள்ளதாகவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
அத்துடன், புதிய அரசியல் கலாச்சாரத்தை நாட்டில் உருவாக்கி வருவதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
அரசாங்கம் திருடர்களைப் பாதுகாப்பதாக சிலர் குற்றம் சுமத்தினாலும் தற்போதைய அரசாங்கம் திருடர்களைப் பிடிப்பதற்காக சட்டங்களை கொண்டு வந்துள்ளதாக சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, ஊழல் ஒழிப்பை அரசியல் கோசமாகக் பயன்படுத்தும் யுகம் முடிவுக்கு வரும் எனவும் தெரிவித்தார்.
தெல்தெனிய புதிய நீதிமன்ற கட்டடத் தொகுதியை இன்று (15) காலை திறந்து வைக்கும் நிகழ்வில் உரையாற்றும்போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனைக் குறிப்பிட்டார்.
ஒரு நாட்டின் ஸ்திரத்தன்மை சட்டத்தை அமுல்படுத்துவதில் தங்கியுள்ளது என சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, ஒரு நாடு என்ற சர்வதேச அங்கீகாரம் சட்ட கட்டமைப்பின் செயற்பாட்டில் அடங்கியுள்ளது என்றும் தெரிவித்தார்.
துரித மகாவலி அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் நிர்மாணிக்கப்பட்ட விக்டோரியா நீர்த்தேக்கத்தின் காரணமாக தெல்தெனிய நகரிலிருந்த பழைய தெல்தெனிய நீதவான் நீதிமன்றம் நீரில் மூழ்கியது. அடுத்து தெல்தெனிய கரலியத்த புதிய நகர நிர்மாணித்தின் போது தெல்தெனிய நீதிமன்ற கட்டிடம் உடைத்து அகற்றப்பட்டது. இந்த இடத்தில் நீதி அமைச்சினால் இந்த புதிய நீதிமன்ற வளாகம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.
மூன்று மாடிக் கட்டிடம் கொண்ட தெல்தெனிய நீதிமன்ற வளாகத்தில், நீதவான் நீதிமன்றம் மற்றும் மாவட்ட நீதிமன்றங்கள் மற்றும் ஏனைய வசதிகள் உள்ளன.தெல்தெனிய, ரங்கல, உடுதும்பர, பல்லேகல, மெனிக்ஹின்ன, வத்தேகம மற்றும் பன்வில ஆகிய பொலிஸ் பிரிவுகளின் வழக்குகள் இங்கு விசாரிக்கப்படும்.
தெல்தெனிய நகரிலுள்ள தெல்தெனிய கூட்டுறவு காணியில் உள்ள கட்டிடத் தொகுதியில் தெல்தெனிய நீதிமன்றம் தற்காலிகமாக இயங்கி வந்த நிலையில், அந்த இடத்தில் வசதிகள் இன்மையால் வழக்கு விசாரணைக்கு வந்த பொதுமக்கள் கடும் சிரமங்களை எதிர்நோக்கினர்.
இந்த நிலையில், இந்தப் புதிய கட்டிடத் தொகுதி திறந்துவைக்கப்பட்டுள்ளது. நினைவுப் படிகத்தைத் திரைநீக்கம் செய்து, புதிய நீதிமன்ற கட்டிடத் தொகுதியை திறந்து வைத்த ஜனாதிபதி, கண்காணிப்பு விஜயத்தையும் மேற்கொண்டார்.
தெல்தெனிய சட்டத்தரணிகள் சங்கம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு நினைவுப் பரிசொன்றையும் வழங்கியது. சட்டத்தரணிகளுடன் சிநேகபூர்வ உரையாடலில் ஈடுபட்ட ஜனாதிபதி அவர்களுடன் புகைப்படமும் எடுத்துக்கொண்டார்.
இங்கு மேலும் கருத்து தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க,
''ஒரு நூற்றாண்டுக்குப் பிறகு, சட்டத் துறையில் பல புதிய சீர்திருத்தங்களைச் செய்துள்ளோம். கடந்த இரண்டு ஆண்டுகளில் 75 சட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. சில பாராளுமன்றங்கள் 04 அல்லது 05 வருடங்கள் செயற்பட்ட போதிலும் இந்த அளவு சட்டங்களை நிறைவேற்றியதில்லை.
அரசாங்கம் அதன் பணிகளை செய்ய வேண்டும். பாராளுமன்ற உறுப்பினர்கள் சட்டங்களை உருவாக்க பாராளுமன்றத்திற்கு வர வேண்டும். அதன்படி புதிய சட்டங்களை நிறைவேற்றி புதிய சட்டக் கட்டமைப்பை அறிமுகப்படுத்த நாம் எதிர்பார்த்திருக்கிறோம்.
மேலும், சட்டத்தின் தாமதம் குறித்தும் அதிக கவனம் செலுத்தியுள்ளோம். நீதி நிலையாட்டப்பட வேண்டும். உரிய நேரத்தில் சட்டம் செயற்படுத்தப்படுத்துவதே எம் முன்பிருக்கும் சவாலாகும். வழக்கு விசாரணைகள் திறம்பட நடத்தப்பட வேண்டும். அவ்வாறு செய்தால் பெருமளவில் வழக்குகள் புதிதாக தாக்கல் செய்யப்படும்.
நாட்டில் சட்டத்தின் ஆட்சி மீண்டும் ஏற்படுத்தப்பட வேண்டும். சட்டத்தை கையிலெடுத்துக் கொண்டு சொத்துக்களை அழித்தால் அங்கே சட்டமே இருக்காது. ஒரு நாட்டின் ஸ்திரத்தன்மை சட்டத்தின் ஆட்சியிலேயே தங்கியிருக்கிறது. நீதி நிலைநாட்டப்படும் போது மாத்திரமே நாடு என்ற வகையில் அங்கீகாரம் கிடைக்கும். இல்லாவிட்டால் நாட்டில் அபிவிருத்தி இருக்காது. முதலீடுகளை எதிர்பார்க்கவும் முடியாது. அதனால் புதிய சட்டக் கட்டமைப்பை நாட்டில் ஏற்படுத்தியிருக்கிறோம்.
மேலும், நாட்டில் தற்போது புதிய பொருளாதார மாற்றம் ஏற்பட்டுள்ளது. நாட்டில் ஏற்றுமதிப் பொருளாதாரத்தை உருவாக்க எதிர்பார்க்கிறோம். அதற்காக பல சட்டங்களை கொண்டுவர சர்வதேச நாணய நிதியத்துடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. முதலாவதாக மத்திய வங்கிச் சட்டம் நிறைவேற்றப்பட்டு, மத்திய வங்கி சுயாதீனப்படுத்தப்பட்டுள்ளது.
தற்போது மின்சார சபை மறுசீரமைப்புச் சட்டத்தை சமர்ப்பித்துள்ளோம். நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்ததற்கு மின்சார சபையின் நஷ்டமும் ஒரு காரணமாகும். வலுவான மின்சார சபையை செயற்படுத்த வேண்டும். அதனால் அந்த சபையின் மீது அரசாங்கம் கொண்டிருக்கும் உரிமைக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது.
மேலும் மூன்று சட்ட மூலங்களை அரசாங்கம் அமைச்சரவையில் சமர்பித்துள்ளது. திங்கட்கிழமை அமைச்சரவையில் அதற்கான அங்கீகாரம் பெறப்படும். அதன் கீழ் கடன் முகாமைத்துவத்தையும் நாம் முன்னெடுத்திருக்கிறோம். இதுவரை தேசிய கடன் கட்டுப்பாடு இருக்கவில்லை. கடனைக் குறைக்க நாம் கடனைக் மட்டுப்படுத்த வேண்டும். 2035-2040 ஆண்டுக்குள் கடன் கட்டுப்பாடு 75% வரையில் கொண்டு வரப்பட வேண்டியது அவசியம். அதற்காக நாட்டின் கடன் முகாமைத்துவச் சட்டத்திற்கு அமையாக அரசாங்கம் செயற்பட வேண்டும்.
மேலும், அரசாங்கத்தின் நிதிக் கட்டுப்பாடு ஒழுங்கின் படி முன்னெடுக்கப்படுகிறது. இந்த ஒழுங்கு முறைகளை மீறவும் முடியும். சுற்று நிருபங்களை திருத்தும் இயலுமையும் உள்ளது. இதுபோன்ற நிதிக் கட்டுப்பாடு நாட்டில் இதற்கு முன்னதாக இருக்கவில்லை.
இன்று அரசாங்கத்துக்குச் சொந்தமான சொத்து பற்றி எவருக்கும் தெரியாது. பொது நிதி நிர்வாகத்திற்கான சட்டங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. நியூசிலாந்து முதலில் இந்த முறையை ஆரம்பித்தது. அதன்பிறகு இங்கிலாந்து, அவுஸ்திரேலியாவைப் போல் இந்தியாவும் அதை அமுல்படுத்தியுள்ளது. இலங்கை அதன் புதிய வடிவத்தை சமர்பித்திருக்கிறது.
இறக்குமதி பொருளாதாரத்தில் இருந்து ஏற்றுமதி பொருளாதாரத்திற்கு நாம் மாற வேண்டும். அதற்கான பொருளாதார மறுசீரமைப்புச் சட்டமூலம் சமர்ப்பிக்கப்படும். அதன்படி சர்வதேச நாணய நிதியத்துடன் இணக்கம் காணப்பட்ட அனைத்து நிபந்தனைகளையும் நடைமுறைப்படுத்தியுள்ளோம். அதிலிருந்து நாம் வெளியேற முடியாது. சர்வதேச நாணய நிதியத்துடன் செய்து கொண்ட ஒப்பந்தங்களை மீறியதாக முன்னர் குற்றம் சாட்டப்பட்டது. ஆனால் இப்போது அது சட்டப்படி செயல்படுத்தப்படுவதால் ஒப்பந்தங்களை மீற முடியாது.
இதை நாம் முன்னெடுத்துச் செல்ல வேண்டும். இல்லையேல் சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து நாம் எதிர்பார்க்கும் ஆதரவு கிடைக்காது. சர்வதேச நாணய நிதியத்துடனான ஜூன் மாத அமர்வுகளுக்கு பின்னர் இந்த சட்டங்கள் கொண்டு வரப்படும்.
சர்வதேச நாணய நிதியத்துடனும் எமக்கு கடன் வழங்கிய நாடுகளுடனும் உடன்படிக்கைக்கு வந்ததன் பின்னர் இந்த செயற்பாடுகளை நடைமுறைப்படுத்தியுள்ளோம். மேலும், இது தொடர்பாக தனியார் கடன் வழங்குநர்களுடனான பேச்சுவார்த்தையும் வெற்றிகரமாக நடந்து வருகிறது.
இந்தப் பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததாக சிலர் கூறுகின்றனர். மேலும் சிலர் பாராளுமன்றம் கலைக்கப்படும் என்று கூறுகின்றனர். இதுபோன்ற அறிக்கைகள் வெளியிடப்பட்டால், அடுத்த நாள் பங்குச் சந்தை வீழ்ச்சியடைகிறது. பிறகு அவர்கள் பங்குகளை வாங்குகிறார்கள். அப்படி எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்று அரசாங்கம் அறிவித்ததும், மீண்டும் நிலைமை வழமைக்கு வருகிறது. இது அரசியலுக்கு அப்பாற்பட்டது.
மேலும் நமது நாட்டில் ஊழல் பெரும் பிரச்சினையாக மாறியுள்ளது. சர்வதேச நாணய நிதியமும் எமக்கு கடன் வழங்கிய நாடுகளும் எம்முடன் இது தொடர்பில் கலந்துரையாடின.
அதற்கான வேலைத்திட்டத்தை நாம் முன்வைத்தோம். அதில் திருத்தங்கள் சேர்க்கப்பட்டு, இணக்கப்பாடு எட்டப்பட்டதையடுத்து, தற்போது புதிய சட்டங்கள் அமுல்படுத்தப்படுகின்றன. அதற்காக 04 முக்கிய சட்டங்கள் உள்ளன. அதில் முதலாவதாக 21 ஆவது திருத்தத்தை முன்வைத்தோம்.
அதன்படி, இது தொடர்பான ஆணைக்குழு உருவாக்கப்பட்டுள்ளது. மேலும், ஊழல் தடுப்புச் சட்டம் 2023 இல் கொண்டு வரப்பட்டு, 2024 இல் திருத்தம் செய்யப்பட்டது.
அடுத்தது அரச நிர்வாக விசாரணை அறிக்கை. அந்த பொறிமுறையைத் தயாரிக்கும் நிபுணத்துவம் எமக்கு இருக்கவில்லை. எனினும், சர்வதேச நாணய நிதிடம் அந்த வளம் இருந்தது. இதுகுறித்த அறிக்கையைத் தயாரித்துத் தருமாறு கோரினோம். அதனை மீண்டும் ஆராய்ந்து, திருத்தங்களைச் செய்து, அரச நிர்வாக விசாரணை அறிக்கையை அரசாங்கம் தயாரித்துள்ளது.
மேலும், முறைகேடாக பெறப்பட்ட சொத்துக்கான சட்ட மூலம் தயாரிப்புப் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறன. அதன்படி, தெற்காசியாவின் புதிய சட்டங்கள் இப்போது இலங்கையில் உள்ளன. இதன் ஊடாக அரசியலில் மாற்றம் ஏற்படும். இதுவரை ஊழல் எதிர்ப்பு என்பது அரசியல் முழக்கமாக மாறியிருந்தது. ஆட்சிக்கு வந்து இரண்டு மாதத்தில் திருடர்களைப் பிடிப்போம் என்று கூறினாலும் அது நடக்காது. மேலும் அரசாங்கம் திருடர்களைப் பாதுகாப்பதாக சிலர் குற்றம் சாட்டுகின்றனர். ஆனால் திருடர்களை பாதுகாக்க வந்ததாக இந்த அரசாங்கம் மீது குற்றஞ்சுமத்தினாலும், திருடர்களைப் பிடிக்க இந்த அரசாங்கமே சட்டம் கொண்டு வந்துள்ளது.
இந்த சட்டங்களை நடைமுறைப்படுத்துவதிற்கு அனுபவம் இருக்க வேண்டும். அந்த அனுபவத்தைப் பெற பயிற்சிகள் பெற வேண்டும். நீதி அமைச்சு அந்த வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்தியுள்ளது. உலக வங்கி, ஆசிய அபிவிருத்தி வங்கி மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் இப்பணிக்கு ஆதரவளிக்க இணங்கியுள்ளன.
அதன்படி, இந்த அரசாங்கம், கடந்த இரண்டு வருடங்களில் 03 முக்கிய விடயங்களை நிறைவேற்றியுள்ளது. நீதி நிர்வாகம் மற்றும் சட்டத்தின் ஆட்சி பலப்படுத்தப்பட்டுள்ளது. மறுபுறம், ஏற்றுமதி பொருளாதாரத்தை உருவாக்கத் தேவையான சட்டங்கள் இயற்றப்பட்டுள்ளன. மேலும், ஊழல் தடுப்புச் சட்டங்களும் நிறைவேற்றப்படுகின்றன. இந்த பணிகளுக்கு அனைவரின் ஆதரவும் கிடைக்கும் என்று நான் எதிர்பார்க்கிறேன்.'' என்று ஜனாதிபதி தெரிவித்தார்.
நீதி, சிறைச்சாலைகள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி விஜயதாச ராஜபக்ஷ
'' தெல்தெனிய பிரதேச மக்களுக்கு இன்றைய தினம் வரலாற்று சிறப்புமிக்க நாளாகும். 2015ஆம் ஆண்டு பிரதமராக பதவி வகித்த ரணில் விக்ரமசிங்க, இந்தப் பகுதிக்கு புதிய நீதிமன்ற கட்டிடத்தொகுதியை வழங்க முயற்சித்தார். இந்தக் கட்டிடத்தை நிர்மாணிப்பதில் காணிப் பிரச்சினை காணப்பட்டது. ஆனால், இந்த இடத்தில் இருந்த பழைய கட்டிடத்துக்குப் பதிலாக புதிய நீதிமன்ற கட்டிடத்தொகுதியை இன்று காண்பது மகிழ்ச்சி அளிக்கிறது.
இந்தத் திட்டத்தை துரிதமாக முடிக்க எங்கள் பொறியியல் துறை பெரும் அர்ப்பணிப்பை மேற்கொண்டது. தற்போதைய அரசாங்கத்தால் இதுபோன்ற பல புதிய நீதிமன்ற கட்டிடத்தொகுதிகளைத் திறக்க முடிந்துள்ளது.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நீதித்துறையின் முன்னேற்றத்திற்காக செய்ய வேண்டிய அனைத்தையும் செய்துள்ளார். ஒரு நாட்டுக்கு நீதித்துறை மிகவும் முக்கியமானது.
நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்து, மக்கள் தவிக்கும் நேரத்தில், இந்த நாட்டைப் பொறுப்பேற்க யாரும் இருக்கவில்லை. ஆனால் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நாட்டைக் கட்டியெழுப்பும் சவாலை ஏற்றுக்கொண்டார். தற்போதைய அரசாங்கம் இந்த நாட்டைக் கட்டியெழுப்புவதில் பெரும் பங்காற்றியது.
அத்துடன் நாட்டின் பொருளாதார வளர்ச்சி, சட்டத்தின் ஆட்சி நிலைநாட்டப்பட்டது. சட்டத்தின் ஆட்சி இல்லாமல் ஒரு நாடு முன்னேற முடியாது. கடந்த இரண்டு வருடங்களில் எமது நாட்டில் சட்டத்தின் ஆட்சி புத்துயிர் பெற்றுள்ளது. சுயாதீன ஆணைக்குழுக்கள் உருவாக்கப்பட்டு ஊழல், இலஞ்ச ஒழிப்பிற்கான புதிய சட்டங்கள் கொண்டுவரப்பட்டன. நீதித்துறையை வலுப்படுத்துவதன் மூலம் எதிர்காலத்தில் மோசடி, ஊழல், குற்றச்செயல்களைத் தடுக்க புதிய சட்டவிதிகள் இயற்றப்படும்.'' என்று தெரிவித்தார்.
நீதி, சிறைச்சாலைகள், அரசியலமைப்பு மறுசீரமைப்பு இராஜாங்க அமைச்சர் சட்டத்தரணி அனுராதா ஜயரத்ன
'' தெல்தெனிய மக்களுக்கு இன்றைய தினம் விசேட தினமாகும். தெல்தெனிய பிரதேசத்தில் பல குறைபாடுகளும் பிரச்சினைகளும் இருந்தன. இன்று இப்பகுதிக்குத் தேவையான வசதிகளை செய்து கொடுக்க முடிந்துள்ளது.
முன்பு, இங்கு நீதித்துறை செயற்பாடுகள் ஒரு குறிப்பிட்ட இடத்திலேயே நடந்தது. இன்று இப்பிரதேசத்திற்கு முழுமையான நீதிமன்ற கட்டிடத்தொகுதியை வழங்க முடிந்துள்ளது. இது பெரும் வெற்றியாகும். தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் கடந்த கால சவால்களில் இருந்து நாட்டை மீட்டெடுக்க முடிந்தது. இந்த நாடு இயல்பு நிலைக்கு கொண்டு வரப்பட்டது. அந்த வகையில் நாம் அனைவரும் அதற்கான கௌரவத்தை வழங்க அவருக்கு வேண்டும்.'' என்று தெரிவித்தார்.
மகாசங்கத்தினர் உட்பட சர்வமதத் தலைவர்கள், இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம, பாராளுமன்ற உறுப்பினர் உதயன கிரிந்திகொட, நீதி, சிறைச்சாலைகள் விவகாரங்கள், அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சின் செயலாளர் என்.எம். ரணசிங்க, மத்திய மாகாண ஆளுநர் சட்டத்தரணி லலித் யு. கமகே, பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய, சட்டமா அதிபர் சஞ்சய ராஜரத்தினம், தெல்தெனிய சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் சுனில் அமரதுங்க, மேல் நீதிமன்ற நீதிபதிகள், சட்டத்தரணிகள், அரச அதிகாரிகள் உள்ளிட்ட பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.