அநுராதபுரம் மாவட்டம் முழுவதும் டீனியா என்ற தொழு நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக வைத்தியர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இந்த நோய் குறித்...
அநுராதபுரம் மாவட்டம் முழுவதும் டீனியா என்ற தொழு நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக வைத்தியர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த நோய் குறித்து கவனயீனமாக செயற்படும் பட்சத்தில், அதன் தாக்கம் நீண்ட காலத்திற்கு காணப்படும் என வைத்தியர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
வடமத்திய மாகாணத்தின் பெரும்பாலான பகுதிகளில் இந்த நோய் பரவியுள்ளமையினால், அநுராதபுரம் போதனா வைத்தியசாலைக்கு வருகைத் தரும் நோயாளர்களின் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்துள்ளதாகவும் அவர்கள் கூறுகின்றனர்.
இதற்கு முன்னர் நாளாந்தம் ஒரு நோயாளர் பதிவாகி வந்த நிலையில், தற்போது நாளாந்தம் சுமார் 25 முதல் 30 வரையான நோயாளர்கள் பதிவாகி வருவதாக வைத்தியசாலை அதிகாரிகள் கூறுகின்றனர்.
பரவிவரும் நோய்க்கு தரமற்ற மருந்து வகைகளை பயன்படுத்துகின்றமையும், டீனியா தொழு நோய் அதிகரிக்க காரணம் என கண்டறியப்பட்டுள்ளது.
இதனால், வைத்திய ஆலோசனையின்றி மருந்து வகைகளை பயன்படுத்த வேண்டாம் என வைத்தியர்கள் எச்சரிக்கை விடுக்கின்றனர்.
வீடொன்றில் ஒருவருக்கு இந்த நோய் ஏற்படும் பட்சத்தில், ஏனையோருக்கும் பரவும் அபாயம் உள்ளதாக வைத்தியர்கள் கூறுகின்றனர்.
சமூக செயற்பாடுகளே இந்த நோய் பரவுவதற்கு காரணம் என வைத்தியர்கள் குறிப்பிடுகின்றனர்.
அத்துடன், அதிக வெப்பம் காரணமாக உடம்பில் ஏற்படும் வியர்வையும் இந்த நோய் ஏற்பட காரணம் என வைத்தியர்கள் கூறுகின்றனர்.
டீனியா தொழு நோய் உள்ள ஒருவரின் ஆடைகளை அணிவதன் ஊடாகவும் இந்த நோய் பரவும் என அவர்கள் எச்சரிக்கை விடுக்கின்றனர்.
தோலில் பரவும் இந்த நோயை குணப்படுத்த, வைத்திய ஆலோசனைகளை பின்பற்ற வேண்டும் என வைத்தியர்கள் தெரிவிக்கின்றனர்.