உடல் நலக் குறைவு காரணமாக நேற்று (30) இரவு உயிரிழந்த தமிழரசுக் கட்சியின் மூத்த பெரும் தலைவர் சம்பந்தனின் (R.Sampanthan) உடல் இறுதிக் கிரியைகள...
உடல் நலக் குறைவு காரணமாக நேற்று (30) இரவு உயிரிழந்த தமிழரசுக் கட்சியின் மூத்த பெரும் தலைவர் சம்பந்தனின் (R.Sampanthan) உடல் இறுதிக் கிரியைகளுக்காக சொந்த ஊரான திருகோணமலைக்கு கொண்டுச் செல்லப்படவுள்ளது.
அன்னாரின் உடல் கொழும்பில் மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு பின்னர் நாடாளுமன்றத்திலும் ஒரு நாள் அஞ்சலிக்காக வைக்கப்படும்.
அதன் பின்னர், சம்பந்தனின் உடல் திருகோணமலைக்கு எடுத்துச் செல்லப்படும்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பெருந்தலைவரும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இராஜவரோதயம் சம்பந்தன் நேற்று (30) இரவு 11 மணியளவில் காலமானார்.
அவர் உடல் நலக்குறைவால் கொழும்பு தனியார் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டிருந்த நிலையில் உயிரிழந்தார்.
இலங்கையில் மிகவும் அரசியல் அனுபவம் வாய்ந்த மூத்த தமிழ்த் தலைவரான இரா. சம்பந்தன், 91 வயதில் உயிர் நீத்தார்.
1977 முதல் 1983 வரை நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த அவர், பின்னர் 2001 முதல் நாடாளுமன்ற உறுப்பினராக உள்ளார்.
2015 செப்டெம்பர் 3 முதல் 2018 டிசம்பர் 18 வரை இலங்கையின் எதிர்க்கட்சித் தலைவராகவும் அவர் பதவி வகித்தார்.
இந்நிலையில். அன்னாரின் பூதவுடல் அஞ்சலிக்காகக் கொழும்பில் மலர்ச்சாலையில் வைக்கப்பட்டு அதன்பின்னர் இறுதிக்கிரியைகளுக்காக அவரின் சொந்த ஊரான திருகோணமலைக்குக் கொண்டு செல்லப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.