ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் புதிய மாவட்ட அமைப்பாளர்கள் நால்வர் நியமிக்கப்பட்டுள்ளனர். அதன்படி ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அநுராதபுரம் மாவட்ட...
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் புதிய மாவட்ட அமைப்பாளர்கள் நால்வர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அதன்படி ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அநுராதபுரம் மாவட்ட அமைப்பாளராக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவும், கம்பஹா மாவட்ட அமைப்பாளராக இராஜாங்க அமைச்சர் இந்திக்க அனுராதவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அத்துடன் அந்த கட்சியின் மாத்தறை மாவட்ட அமைப்பாளராக நாடாளுமன்ற உறுப்பினர் நிபுண ரணவக்கவும், காலி மாவட்ட அமைப்பாளராக இராஜாங்க அமைச்சர் மொஹான் டி சில்வாவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த ஜூலை 29 ஆம் திகதி ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அரசியற்குழு, எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் மொட்டுச் சின்னத்தில் வேட்பாளர் ஒருவரைக் களமிறக்குவதற்குத் தீர்மானித்தது.
இந்த நிலையில், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவைச் சேர்ந்த பலர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு தமது ஆதரவை வழங்குவதாக அறிவித்திருந்தனர்.
இவ்வாறான பின்னணியில், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு தமது ஆதரவை வெளியிட்ட ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கம்பஹா மாவட்ட அமைப்பாளர் பொறுப்பிலிருந்து அமைச்சர் பிரசன்ன ரணதுங்க நீக்கப்பட்டார்.
அதேநேரம், அநுராதபுரம் மாவட்ட அமைப்பாளர் பொறுப்பிலிருந்து நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். சந்திரசேனவும், மாத்தறை மாவட்ட அமைப்பாளர் பொறுப்பிலிருந்து அமைச்சர் கஞ்சன விஜேசேகரவும், காலி மாவட்ட அமைப்பாளர் பொறுப்பிலிருந்து அமைச்சர் ரமேஷ் பத்திரனவும் நீக்கப்பட்டனர்.