உயிரிழந்தவரை நினைவு கூர தடையில்லை என பாதுகாப்பு செயலாளர் சம்பத் துய்யகொந்தா தெரிவித்துள்ளார். உயிரிழந்தவர்களை நினைவு கூர காவல்துறை இடையூறு...
உயிரிழந்தவரை நினைவு கூர தடையில்லை என பாதுகாப்பு செயலாளர் சம்பத் துய்யகொந்தா தெரிவித்துள்ளார்.
உயிரிழந்தவர்களை நினைவு கூர காவல்துறை இடையூறு விளைவித்தமை தொடர்பில் ஊடகவியலாளர்கள் பாதுகாப்பு செயலாளரிடம் வினவிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
யுத்தத்தில் உயிரிழந்தவர்களை நினைவு கூர்வதற்கு எந்த விதமான தடைகளையும் விதிக்கவில்லை.
இதனை எமது அரசாங்கம் ஒரு கொள்கையாக பிரகடனப்படுத்தியுள்ளது.
இவ்வாறான நிலையில் சட்டவிரோதமான முறையில் நினைவேந்தல் முன்னெடுக்கப்படுமாயின் அதற்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, தேசிய மக்கள் சக்தியின் ஆட்சிக்காலம் நிறைவடைய முன் பாதுகாப்பு படையினர் வசமுள்ள காணிகள் விடுவிக்கப்படும் என பாதுகாப்பு செயலாளர் சம்பத் துய்யகொந்தா தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாண மாவட்டத்தில் எஞ்சியுள்ள 2,700 ஏக்கர் காணிகள் விடுவிக்கப்படுமா? என ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
காணி விடுவிப்பு தொடர்பில் தற்போது கலந்தாலோசிக்கப்பட்டு வருகிறது. அது தொடர்பில் எதிர்காலத்தில் தாங்கள் சரியான மதிப்பீட்டை மேற்கொள்வோம்.
பாதுகாப்பு மற்றும் ஏனையைக் காரணங்களின் அடிப்படையில் நாம் சில முடிவுகளை எடுத்துள்ளோம்.
ஏற்கனவே சில வீதிகளை நாம் விடுவித்துள்ளோம். அத்துடன் இந்த நாட்டு மக்களின் நலன் குறித்து நாம் எப்பொழுதும் கரிசனையுடையவர்களாகவே இருப்பதாகப் பாதுகாப்பு செயலாளர் சம்பத் துய்யகொந்தா தெரிவித்துள்ளார்.