கடந்த பொதுத் தேர்தலில் போட்டியிட்டு, தங்களது செலவு அறிக்கையை சமர்ப்பிக்காத வேட்பாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாகத் தேர்தல்...
கடந்த பொதுத் தேர்தலில் போட்டியிட்டு, தங்களது செலவு அறிக்கையை சமர்ப்பிக்காத வேட்பாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாகத் தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
கொழும்பில் இன்று (17) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க இதனைத் தெரிவித்துள்ளார்.
கடந்த பொதுத் தேர்தலுக்கான தேர்தல் செலவு அறிக்கையை சமர்ப்பிப்பதற்காக, குறித்த தேர்தலில் போட்டியிட்ட 8,888 வேட்பாளர்களுக்கு வழங்கப்பட்டிருந்த கால அவகாசம் கடந்த 6ஆம் திகதி நள்ளிரவுடன் முடிவடைந்தது.
இந்தநிலையில், தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு சமர்ப்பிக்கப்பட்ட செலவு அறிக்கைகள் மாவட்ட செயலகத்திலுள்ள தெரிவத்தாட்சி அலுவலரின் காரியாலயத்தில் இன்று (17) முதல் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
அதன்படி, ஒவ்வொரு மாவட்ட செயலகத்திலும் காட்சிப்படுத்தப்பட்டுள்ள, அந்தந்த மாவட்டத்தில் போட்டியிட்ட அரசியல் கட்சிகளினதும் சுயேட்சை குழுக்களினதும் வேட்பாளர்களின் செலவு அறிக்கைகளை இன்று முதல் பொதுமக்கள் பார்வையிட முடியும்.
இது தொடர்பான தகவல்களைப் பெற்றுக்கொள்வதற்கு இன்று முதல் 10 நாட்களுக்கு வாக்காளர்களுக்குக் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
அதேநேரம், செலவு அறிக்கையை சமர்ப்பிக்காத வேட்பாளர்களுக்கு எதிராக உரிய மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலர்கள் ஊடாக மாவட்டங்களுக்குப் பொறுப்பான பிரதி காவல்துறை மா அதிபரிடம் முறைப்பாடு செய்யப்படவுள்ளது.
அதற்கமைய, விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு, அதன் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டதன் பின்னர் சட்டமா அதிபரால் குறித்த வேட்பாளர்களுக்கு எதிராக வழக்கு தொடரப்படும் என தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.