'கெஹெல்பத்தர பத்மே' என்பவருக்குப் போலி கடவுச்சீட்டு வழங்கிய குற்றச்சாட்டில் கைதான குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்கள உதவி கட்டுப...
'கெஹெல்பத்தர பத்மே' என்பவருக்குப் போலி கடவுச்சீட்டு வழங்கிய குற்றச்சாட்டில் கைதான குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்கள உதவி கட்டுப்பாட்டாளர் எதிர்வரும் 29 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வெளிநாட்டில் உள்ள ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக்கும்பல் உறுப்பினரான கெஹெல்பத்தர பத்மேவுக்கு போலி கடவுச்சீட்டை தயாரித்து வழங்கிய குற்றச்சாட்டில் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள உதவி கட்டுப்பாட்டாளர் ஒருவர் இன்று கைது செய்யப்பட்டார்.
கைது செய்யப்பட்டு கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் இன்று முன்னிலையாக்கப்பட்ட போதே நீதிமன்றம் அவரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டது.
கைது செய்யப்பட்ட அதிகாரி, கைரேகைகள் இல்லாமல் கெஹெல்பத்தர பத்மேவின் கடவுச்சீட்டை தயாரித்தவர் என சந்தேகிக்கப்படுவதாகக் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
கெஹெல்பத்தர பத்மேவுக்கு போலி கடவுச்சீட்டைத் தயாரிக்க முயன்ற இரண்டு சந்தேக நபர்கள் ஏலவே கைது செய்யப்பட்டனர்.
இது தொடர்பான விசாரணையில் இருவரும் கெஹெல்பத்தர பத்மேவின் படத்தை வட்ஸ்அப் மூலம் பெற்று, அதனைத் திருத்திக் கடவுச்சீட்டு தயாரிப்புக்காக குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்துக்கு அனுப்பியுள்ளமை தெரியவந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
குற்றக்கும்பல் உறுப்பினர் கணேமுல்ல சஞ்சீவவின் கொலையுடன் தொடர்புடையவர் எனக் கூறப்படும் கெஹெல்பத்தர பத்மே 2014 ஆம் ஆண்டில் பெறப்பட்ட கடவுச்சீட்டைப் பயன்படுத்தி 2021 ஆம் ஆண்டில் வெளிநாடு சென்றுள்ளார்.
கடந்த ஆண்டு அந்த கடவுச்சீட்டு காலாவதியாகியுள்ளதாக விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.